ஆன்மிகம்
பங்குனி உத்திர திருவிழா நடைபெறாததால் களையிழந்து காணப்பட்ட கங்கைகொண்டான் செண்பக சாஸ்தா கோவில்

சாஸ்தா கோவில்களில் களையிழந்த பங்குனி உத்திர திருவிழா

Published On 2020-04-07 04:09 GMT   |   Update On 2020-04-07 04:09 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா களையிழந்தது. ஆனால், பக்தர்கள் இன்றி கோவில்களில் பூஜைகள் நடந்தன.
பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள். குடும்பத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் குல தெய்வமான சாஸ்தாவுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திவிட்டுதான் நிகழ்ச்சியை தொடங்குவார்கள். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும்தான் அதிகம் இருக்கின்றன.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் இன்றி கோவில் பூசாரி மட்டுமே சென்று சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் பூஜை நடத்தினார்கள். இதனால் பங்குனி உத்திர திருவிழா களையிழந்து காணப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் உத்திரத்தன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்புபோட்டு வழிபாடு நடத்துவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள். ஆனால், இந்த ஆண்டு காலை 7 மணிக்குள் அனைத்து சைவ பூஜைகளை மட்டும் செய்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டனர். ஒரு சில பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் தென்மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்கள் களையிழந்து காணப்பட்டன.

சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறாததால், பக்தர்கள் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
Tags:    

Similar News