ஆன்மிகம்
திருச்செந்தூர் முருகன் கோவில்

நெல்லையப்பர்-திருச்செந்தூர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து

Published On 2020-03-28 09:31 GMT   |   Update On 2020-03-28 09:31 GMT
நெல்லையப்பர், திருச்செந்தூர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவுக்கான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. எனினும் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு உரிய நேரங்களில் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலிலும் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற இருந்தது. இந்த விழாவில் மன்னருக்கு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பங்குனி உத்திரம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நித்ய பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News