ஆன்மிகம்
முகாசபரூரில் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி

முகாசபரூரில் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி

Published On 2020-03-21 08:13 GMT   |   Update On 2020-03-21 08:32 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசபரூரில் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசபரூரில் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முகாசபரூர் என்ற கிராமம். இந்த கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே அழகிய வடிவிலே கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் அன்னபூரணி உடனுறை காசி விஸ்வநாதர்.

இந்த கோவிலை சுற்றிலும் மரங்கள் அடர்த்தியாக உள்ளன. கோவிலின் வளாகத்தில் காணப்படும் மூலிகைச்செடிகளும், குளிர்ந்த காற்றினையும், இதமான நறுமணத்தையும் அள்ளி வீசி கோவிலுக்குள் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் கண்ணில் படும். உள்ளனர். கொடிமரத்தை கடந்து சென்றால் நந்தியும், அவரை கடக்க கோவிலுக்குள்ளே காசி விஸ்வநாதர்-நமச்சிவாய ஒலியுடன், அழகிய சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.

அவரை தரிசினம் செய்யும் போதே எண்ணி வந்த காரியங்கள் சித்தியாகும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு பிறந்து விடுகிறது. அவரை தரிசினம் செய்த பின்பு தாயார் அன்னப்பூரணியை தனி சன்னதியில் சென்று தரிசினம் செய்யலாம். இந்த சன்னதியின் முன் பகுதியில் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் பல்லவர் காலத்து கல்வெட்டு அமைந்துள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது இந்த கோவில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என கூறுகின்றனர்.

அடுத்து காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்புறம் உள்ள கோரக்கர் சித்தர் ஜிவ சமாதிக்கு செல்ல வேண்டும். தரிசனம் செய்யும் போது அமைதியும், ஆற்றலும், நம்பிக்கையும் கிடைத்து விடுகிறது. அவரை குருவாக ஏற்றுகொண்டவர்கள் பலர். அவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் வந்து தரிசித்து விட்டு செல்வார். அவரை போலவே யாருக்கும் தெரியாமல் பல வி.ஐ.பி க்கள் வந்து செல்கின்றார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கோரக்கர் சித்தரை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்.

எண்ணி வந்த காரியங்களை அவரிடம் தெரிவித்து விட்டு அவர் சமாதி முன்பு எழுதியுள்ள பசு, பரபதி, பட்சிராஜ, நிரதிசயசித்ரூப, ஞானமூர்தேய, தீர்க்க நேத்ராய, கணகண் கம்கங் கெங்லங் லிங், லங், லாலீலம், ஆவ், பாங்ஆம், ஊம், பார்கவ்விய ஜோதி மய, வரப்பிரசன்ன, பாததெரிஸ்ய கோரக்க சரணாயநமஸ்து
என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தால் அவர் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருள்வார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அவருடைய தரிசினம் முடிந்த பிறகு தெற்கு பார்த்த விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்பவர், கன்னீமூல கணபதி, வள்ளி, தெய்வானை உடனுறை முருகன், ஐஸ்வர்ய லட்சுமி, வேப்பிலை மாரியம்மன், துர்கை, சண்டிகேஸ்வரரை தரிசினம் செய்யலாம். சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் கோரக்கர் சித்தர் காவி விஸ்வநாதருக்கு பூஜைகள் செய்யும் புடை சிற்பத்தால் ஆன தத்ரூபமான காட்சியை காணலாம். அதனை தொடர்ந்து பைரவர், நவக்கிரகங்கள், என ஒவ்வொரு தெய்வத்தையும் தரிசினம் செய்யலாம்.

இந்த கோவிலிலும், இந்த கிராமத்திலும் பல்வேறு மூலிகைகள் உள்ளதாகவும், கோரக்கர் சித்தரை நம்பி வருபவர்களுக்கு அவருடைய ஆத்மா மனித உருவம் எடுத்து அவர்கள் பிணிகள் நீங்குவதற்கான மூலிகைகளை காண்பிக்கின்றார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கோவிலில் தினந்தோறும் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி, மற்றும் பவுர்ணமி தினங்களில் காலை 7 மணியில் இருந்து பூஜைகள் ஆரம்பித்து யாகம், ஹோமம், உள்ளிட்டவைகளும், கோரக்க சித்தருக்கு 16 வகையான பூஜைகளும், நள்ளிரவு 12.45 மணிக்கு நிலவு பூஜையும் நடக்கும்.

பூசை பொருட்கள்:

கோரக்கருக்கு நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பெரி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுசர்க்கரை கலவை, இவற்றுடன், கார்த்திகை நட்சத்திர நாள் மற்றும் சனிக்கிழமை கருநீல நிற வஸ்திரம் வைத்து வழிபாடு நடத்தினால் சிறப்பு என கூறுகின்றார்கள்.

கிடைக்கும் பலன்கள்:

சனி கிரகத்தை பிரதிப்பலிப்பவர் ஆகையால் ஜாதக சனி தோஷங்கள் விலகி நன்மை பயக்கும், விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும், காரியங்களில் வெற்றி கிடைக்கும். படிப்பில் மந்த நிலை இருந்தால் மாறும். நன்மக்கட்பேறு கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும், வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.

5 வியாழக்கிழமைகள், மற்றும் 5 பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டு வேண்டுதல் வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். குடும்ப பிரச்சினைகளும், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என பலன் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த கோவிலுக்கு விருத்தாசலத்தில் இருந்தும், மங்கலம்பேட்டையில் இருந்தும் பஸ், ஆட்டோக்கள் மூலம் செல்லலாம், விருத்தாசலத்தில் இருந்து டவுன் பஸ் 23, 38, 2 ஆகிய பஸ்களும், நவீன் என்ற தனியார் பஸ்சும் செல்கிறது. மங்கலம்பேட்டையில் இருந்து 23ம் எண் டவுன் பஸ்சும், நவீன், வானவில் என்ற தனியார் பஸ்களும் சென்று வருகின்றன.

Tags:    

Similar News