ஆன்மிகம்
கோரக்கர் சித்தர்

சதுரகிரியில் கோரக்கர் சித்தர்

Published On 2020-03-21 07:40 GMT   |   Update On 2020-03-21 07:40 GMT
சதுரகிரி மலை மீது ஏறி வரும் பக்தர்களும் மலையில் இருந்து கீழே இறங்கி வரும் பக்தர்களும் இந்த கோரக்கர் குகை பகுதியில் சற்று தங்கி நீராடி விட்டு, உணவு உண்டு இளைப்பாறிச் செல்வார்கள்.
சதுரகிரியில் பசுமிதிப் பாறையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் ஒரு திருப்பத்தில் கோரக்கர் குகை என்று பாறை மீது சுண்ணாம்பால் எழுதி அம்புக் குறிட்ட அறிவிப்பு ஒன்று காணப்படும். அந்த பகுதியில் உள்ள பாறை இடுக்குகள் வழியாக கீழே சுமார் 150 அடி பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டும். அந்த பாதையில் ஓடை ஒன்று குறுக்கிடும். பாறையில் ஓடிக் கொண்டிருப்பதால் சற்று பாசி பிடித்தே அந்த ஓடை தண்ணீர் காணப்படும்.

இதனை, அர்ஜூனா நதி என்று குறிப்பிடுகின்றனர். இந்த நதி மழைக்காலங்களில் பெரும் வெள்ளத்துடன் ஆர்ப்பரித்துச் செல்லும். இந்த நதியில் எப்போது வெள்ளம் வரும் என்று நிச்சயமாகக் கூற முடியாது. எனவே சதுரகிரி செல்பவர்கள் இந்த பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். சதுரகிரி மலை மீது ஏறி வரும் பக்தர்களும் மலையில் இருந்து கீழே இறங்கி வரும் பக்தர்களும் இந்த கோரக்கர் குகை பகுதியில் சற்று தங்கி நீராடி விட்டு, உணவு உண்டு இளைப்பாறிச் செல்வார்கள்.

அந்த ஆற்று நீர் ஒரே தடமாக இல்லாமல் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஓடுகிறது. இங்கு நேர் வடக்காக ஆற்றுக்குள் இறங்கினால் தென்புறம் மலைச்சரிவில் கோரக்கர் குகையும், அதன் நேர் கிழக்கே எக்காலத்திலும் வற்றாத ஒரு பொய்கையும் இருப்பதாக கோரக்கர் குறிப்பு தெரிவிக்கிறது.

இடுப்பளவு ஆழமுள்ள சின்ன பொய்கையை அடுத்து சற்று ஆழமான பெரிய பொய்களையும் அங்கு உள்ளது. அந்த பொய்கைக்கு மேலே முக்கோண வடிவமுள்ள பாறையில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடியபடி இருக்கும். இந்த இரண்டாவது பொய்கையை கோரக்கர் தீர்த்தம் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த கோரக்கர் தீர்த்ததைப் பற்றி காலாங்கிநாதர் தனது ஞானவித்து ரகசியத்தில்,

உண்டப்பா இன்னுமொரு அதிசயம்தான்
உலகத்தி லுள்ளோர்கள் அங்குவந்து
குண்டப்பா கோரக்கர் தீர்த்தமாடிக்
கொள்ளவே எப்பிணியும் அகன்று போகும்
மண்டப்பா கரம் இரண்டும் ஒன்றாய்க் கூட்டி
வாரிநீர் மூன்று கையுண்ணப் போதை
கொண்டப்பா சென்மசாபல்ய மாகும்
கோரக்கர் தனைப் போற்றக் குணமுண்டாமே

என்று கூறுகின்றார்.

இந்த பாடலின் பொருள் வருமாறு:

கோரக்கர் தீர்த்தத்தில் நீராடி, குண்டாவிலிருக்கும் நீரில் மூன்று கை அள்ளி உண்டால் சகல நோய்களும் குணமாகும். கோரக்கரைப் போற்றினால் நிச்சயமாக எல்லா வியாதிகளும் குணமாகும் என்பதாகும். கோரக்கர் தீர்த்தத்தை கடந்து சென்றால் கோரக்கர் குகையை அடையலாம்.

அருவி நீர் பாயும் ஆற்றுப்பரப்பில், பெரும் பாறைக்கு கீழே கோரக்கர் குகை காணப்படுகிறது. பிரமாண்டமான பாறையின் கீழே சிறியதான ஒரு பாறை மற்றும் பாறை அடுக்குகளின் இடைவெளி தான் கோரக்கர் தவமிருந்த இடம். அங்கு நமது காலைத் தொங்கப் போட்டபடி அமரலாம். அல்லது வெளியே காலை நீட்டியபடி விழுந்து வணங்க லாம். ஆனால் உள்ளே மூவர் மட்டும் தாராள மாக அமரக்கூடிய மிகக்குறுகலான இடம்.

முன் பக்கமாக சற்று உயரமாக காணப்பட்ட உள்ளிடம் போக போக குறுகத் தொடங்கியது. முடியும் இடத்தில் ஒரு சிறிய வாயில் வழியே பெரியதான இடத் திற்கு தவழ்ந்து வர இயலும் விசித்திரமான அமைப்பு காணப்படுகிறது.

உள்ளே சுமார் அரையடி உயரம் உள்ள லிங்கம் ஒன்றும் அதற்கு பக்கத்தில் அதற்கு இணையான சுயம்புலிங்கம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு லிங்கங்களுக்கு இடையே நீண்ட திரிசூலம் ஒன்று சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. லிங்கத்தை சுற்றிலும், அகல் தீபங்கள் காணப்படுகின்றன. கோரக்கர் குகைக்கு வடக்கே சுமார் பத்தடி தூரத்தில் மூன்றடி விட்டமுள்ள குழி ஒன்று காணப்படுகிறது. இது சித்தர் நூல்களில் குழிக்கல் என்று குறிப்பிடப்படுகிறது. கோரக்கர் மருந்து இடிப்பதற்கும் மருந்து அரைப்பதற்கும் இக்குழியைத் தான் பயன்படுத்தினாராம்.

குழிக்கல்லுக்கு வலதுபுறம் சற்று தள்ளி சென்றால் ஆற்றின் நடுவே பாறையில் 10 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட பெரிய நீர் தேங்கிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இதனைத்தான் கோரக்கர் குண்டா என்று குறிப்பிடுகின்றனர். பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமியின் நவபாஷாண விக்கிரகத்தை போகரின் உத்தரவுப்படி கோரக்கர் இங்கு தான் வடிவமைத்ததாக சொல்கிறார்கள்.

வீரம், பூரம், பாதரசம், ரசகஷ்பூரம், லிங்கம், மனோ சிலை, கந்தகம், கார்முகில், தாழகம் ஆகிய நவ பாஷாணங்களுடன் 473 மூலிகை சாற்றினை சேர்த்து கோரக்கர் போகரின் உத்தரவுப்படி பழனி தண்டா யுதபாணி சிலையை செய்தார் என்று குறிப்புகள் உள்ளன. பாஷாணக் கலவை கெட்டிப்படுவதற்காக கோரக்கர் தன் கைகளையே அணைபோல கட்டித் தண்ணீரைச் சேமித்து வைத்தாராம். நாம் காணும் கோரக்கர் குண்டாவும் இரண்டு கைகளால் தண்ணீரை மறித்து வைத்திருப்பது போன்ற தோற்றத்தை தருகிறது.

சதுரகிரி மலையில் கோரக் கர் குகைக்குச் செல்ல வனத் துறை சமீபத்தில் தடை விதித்து தடுப்பு கள் அமைத் துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இங்குள்ள கோயில் களுக்கு முன்பு எப்போது வேண்டு மானாலும் பக்தர்கள் சென்று வரலாம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்க விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

2015-ல் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, நாள்தோறும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சதுரகிரி மலையில் கோரக்கர் சித்தர் தவமிருந்து வழிபட்ட குகை உள்ளது. சதுரகிரி மலைக்குச் செல்லும் வழியில் மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை, சங்கிலிப் பாறையைத் தாண்டிச் சென்றால் கோரக்கர் சித்தர் குகையைக் காணலாம். ஏராளமான பக்தர்கள் இந்த குகையில் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், தற்போது கோரக்கர் சித்தர் குகை பாதை வனத்துறையினரால் வேலி அமைக்கப்பட்டு தடுக் கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோரக்கர் குகைக்குச் சென்று வழிபட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சதுரகிரி மலை, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்கு குறிப்பிட்ட பாதையில் சென்று வர மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு. வேறு எந்தப் பாதையில் செல்லவும் அனுமதி இல்லை. அதை மீறி சிலர் காட்டாறு பகுதியில் உள்ள கோரக்கர் குகைக்குச் சென்று வருகின்றனர். அதைத் தடுக்கவே, இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News