ஆன்மிகம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா 1-ந்தேதி தொடங்குகிறது

Published On 2020-02-26 06:44 GMT   |   Update On 2020-02-26 06:44 GMT
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்காலில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த பொங்கல் விழாவில் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண்கள் வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இந்த கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி ஒரே நேரத்தில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து உலக சாதனை படைத்தனர். இச்சாதனை 2009-ம் ஆண்டு முறியடிக்கப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடைபெற்ற பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

இந்த கோவிலில் இந்த ஆண்டு பொங்கல் விழா மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி குடியமர்த்தும் நிகழ்ச்சி நடக்கிறது. பிரசித்திப்பெற்ற பொங்கல் வழிபாடு 9-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 10.20 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2.10 மணிக்கு நிவேத்திய பூஜை நடைபெறும். 10-ந் தேதி இரவு நடைபெறும் குருதி தர்ப்பனத்துடன் விழா நிறைவு பெறும்.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம் உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

விழாவையொட்டி, சிறுவர்களுக்கான குத்தியோட்ட நேர்ச்சை வழிபாடு மற்றும் சிறுமிகளுக்கான தாலப்பொலி நேர்ச்சையிலும் நூற்றுக்கணக்கான சிறுவர்-சிறுமிகள் பங்கேற்கிறார்கள். குத்தியோட்ட சிறுவர்கள் வருகிற 3-ந் தேதி முதல் தங்களது விரதத்தை தொடங்குவார்கள். 9-ந் தேதி இரவு விரத நேர்ச்சை நிறைவுபெறும். பொங்கல் வழிபாடு தினத்தில் இரவு மணக்காடு சாஸ்தா கோவிலை நோக்கி அம்மன் புறப்பாடு நடக்கிறது.

பொங்கல் விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகளை நடிகை அனு சித்தாரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். ஆற்றுக்கால் அம்பாள் விருது பிரபல கவிஞரும், இயக்குனருமான ஸ்ரீகுமாரன் தம்பிக்கு வழங்கப்படுகிறது.

விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள அம்பாள், அம்பிகா, அம்பாலிகா ஆகிய 3 விழா மேடைகளில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News