ஆன்மிகம்
கோட்டை மாரியம்மன்

திருப்பூர் கோட்டைமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

Published On 2020-02-26 03:55 GMT   |   Update On 2020-02-26 03:55 GMT
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.
திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த 18-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதையடுத்து நேற்று முன்தினம் மகாகணபதி பொங்கல் மற்றும் நொய்யல் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் ராகவேந்திரர் கோவிலில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, வானவேடிக்கை, நையாண்டி மேளம், செண்டை மேளத்துடன் கம்பம், கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், முளைப்பாரி, பால்குடம் ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தில்லை நகரில் இருந்து படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், பொங்கல் விழாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், 28-ந்தேதி கோவில் அன்னதான மண்டபத்தில் அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்னதானத்தை கூனம்பட்டி ஆதீனம் நடராஜசுவாமிகள் தொடங்கி வைக்கிறார்.

விழாவையொட்டி, இன்று அம்மனுக்கு தங்க கவச அலங்காரமும், நாளை பண்ணாரி அம்மன் அலங்காரமும், 28-ந்தேதி மீனாட்சிஅம்மன் அலங்காரமும் செய்யப்படுகிறது. இந்த அலங்காரங்களில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் விழா கமிட்டியாரிடம் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விழாவையொட்டி, மகிழ்ச்சியும், மனநிறைவும் அதிகம் இருப்பது கிராம வாழ்க்கையா நகரவாழ்க்கையா என்ற தலைப்பில் நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 28-ந்தேதி இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், 29-ந்தேதி திரைப்பட நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த விழாவில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சமூக நல சங்கத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News