ஆன்மிகம்
சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் மயானத்துக்கு புறப்பட்டு சென்ற காட்சி.(உள்படம் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன்)

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

Published On 2020-02-24 03:08 GMT   |   Update On 2020-02-24 03:08 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சக்திகரகம் ஊர்வலம் நடந்தது.

விழாவின் 2-வது நாளான நேற்று மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள சிவபெருமான் மற்றும் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு 12 கரங்கள் கொண்டு ஆக்ரோ‌‌ஷமான அங்காளம்மன் அலங்காரம் செய்து, கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு ஊர் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மன் பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக வந்து, சிம்ம வாகனத்தில் அமர்த்தப்பட்டார்.

பின்னர் வடக்கு வாயிலில் மஞ்சள் துணி தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்டார். அப்போது பிரம்ம கபாலத்தை பூசாரிகள் கைகளில் ஏந்தியபடி பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி ஊர்வலமாக மயானத்துக்கு சென்றனர். இதையடுத்து அங்கு 11 மணிக்கு அம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, தானியங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது.

விழாவின்போது அங்காளம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பலர், அவற்றை பிரசாதமாகவும் எடுத்து சென்றனர்.

முன்னதாக அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்தனர். இதில் சிலர் நாக்கு, தாடையில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மயானத்துக்கு வந்திருந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் பலர் அருள் வந்து ஆடினர். அவர்களில் சிலர் சேவல், கோழியை கடித்து, அதன் ரத்தத்தை குடித்தது, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அருள் வந்து ஆடியவர்களின் முன்பு பலர் விழுந்து வணங்கினர். அப்போது அவர்கள் மீது, சாமி ஆடியவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர்.
Tags:    

Similar News