ஆன்மிகம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவில்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2020-02-19 06:21 GMT   |   Update On 2020-02-19 06:21 GMT
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பார்வதிதேவி சிவராத்திரி தினத்தில் இரவு 4 ஜாமத்திலும் சிவபெருமானை வழிபடுவதால் சிவராத்திரி என போற்றப்படுகிறது. பிரம்மா, வி‌‌ஷ்ணு இருவருக்கும் அருள்பாலிக்கும் வகையில் சிவபெருமான் சிவலிங்க திருமேனி கொண்ட காலமே மகாசிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. விழாக்களில் முதன்மையும் பெருமையும் கொண்டது மகா சிவராத்திரி விழாவாகும்.

சிவராத்திரி என்பது துக்கங்களை போக்கி சுகத்தை கொடுப்பது என்னும் பொருளுடையது. சிவராத்திரி விழா என்பது இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனை வழிபட்டு அனு‌‌ஷ்டிக்கப்பெறுவது ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி விழா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

முன்னதாக காலை 10 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், மாலை 4 மணி முதல் 6 மணிவரை பிரதோ‌‌ஷ வழிபாடு நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி முதல் முதல்கால பூஜை, 11 மணி முதல் 2-வது கால பூஜை, மறுநாள்(சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணி முதல் லிங்கேத்பவர் அபிஷேகம், 2 மணி முதல் 3-வது கால பூஜை, 4 மணிமுதல் 4-வது கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணி முதல் 8 மணிவரை அதிகார நந்திபுறப்பாடு நடக்கிறது.

இதுதவிர நாளை மறுநாள் மாலை 5 மணி முதல் மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் பரணிதரன், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News