ஆன்மிகம்
சத்குரு

மனிதன் தன் உச்சநிலையை அடைய 112 வழிகள் தானா?

Published On 2020-02-18 08:18 GMT   |   Update On 2020-02-18 08:18 GMT
மனித உயிரின் 112 பரிமாணங்களைப் பயன்படுத்தி உச்சநிலையை அடைவது எப்படி என்று சத்குரு விவரித்தார்.
சிவனின் வழிகள் ஒவ்வொன்றும் மிக நுணுக்கமானவை, முழுமையானவை. அவற்றை அவர் போதனைகளாக வழங்கவில்லை, முறைகளாகவே கொடுத்தார். இது மிகவும் தனித்துவமானது. மற்றவர்கள் எல்லாம் போதனைகளைத் தந்தனர். ஆனால் அவர் எதையும் கற்பிக்கவில்லை. வெறும் வழிமுறைகளாக மட்டும் அவற்றை வழங்கினார். 108 முறைகளோடு இன்னும் ஆறு முறைகளை சேர்த்து மொத்தம் 112 முறைகளை அவர் வழங்கினார்.

ஏன் 112 முறைகள்? மனித உடலில் மொத்தம் 114 சக்கரங்கள் உள்ளன. இரண்டு சக்கரங்கள் உடலுக்கு வெளியே உள்ளன. அவை இரண்டும், உடல்நிலையைக் கடந்த நிலையில் உள்ளவர்களுக்கே சாத்தியப்படும். மனிதர்களுக்கு வெறும் 112 வழிகள்தான். மனித உயிரின் இந்த 112 பரிமாணங்களைப் பயன்படுத்தி உச்சநிலையை அடைவது எப்படி என்று அவர் விவரித்தார்.

மனித உயிரின் இயக்கத்தைப் பற்றி ஆதியோகி சப்தரிஷிகளிடம் பல ஆண்டுகாலம் விவரித்ததற்கு ஒரே சாட்சி, பார்வதிதான். ஆனால், அவள் புத்தருடன் இருந்த ஆனந்ததீர்த்தரைப் போன்றவள் அல்ல. அவளும் ஞானோதயம் அடைந்தவள். ஆதியோகி அவளுக்கு மிக அன்யோன்யமான விதத்தில் ஞானத்தைப் பரிமாறினார். ஆனால், சப்தரிஷிகளிடம் அவர் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இதனை விவரித்துக்கொண்டு இருந்தார்.

இதைக் கண்ட பார்வதிக்கு ஆர்வம் அதிகமாயிற்று. அவளுக்கு மிகவும் எளிதாக நடந்த ஒன்று, இவர்களுக்கு இவ்வளவு நுணுக்கமாகவும், விரிவானதாகவும் கற்றுத் தரப்படுகிறதே என்றுதான். அப்போது அவர், மனித அமைப்பு 112 வழிகளின் மூலம் மட்டும்தான் தன் உச்சநிலையை அடைய முடியும் என்று சொன்னார்.
பார்வதி, ஏற்கனவே ஞானோதயம் அடைந்தவள். அதிலும் ஒரு பெண்மணி. அனைத்திற்கும் மேல் சிவனின் மனைவி. அதனால், இதைக் கேட்ட பார்வதி ஆதியோகியிடம், ஏன் 112 வழிகள் மட்டும் இருக்க வேண்டும். இன்னும் நிறைய வழிகள் இருந்தாக வேண்டுமே என்று வினவினாள். அப்போது ஆதியோகி அவரது சீடர்களிடம் இவற்றைப் பற்றி தீவிரமாக விவரித்து ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறு பார்வதி சொன்னது, அவருக்கு இடையூறாக இருந்ததால், “112 வழிகள்தான், நீ சும்மா உட்காரு,” என்று அவளைப் புறக்கணித்தார். தனிப்பட்ட முறையில், ஏளனமாக இவ்வாறு கூறியதால், “அவள், ஏன் இருக்க முடியாது; என்னால் இதைவிட அதிகமான வழிகளைக் கண்டறிய முடியும்,” என்றாள். அதற்கு ஆதியோகி, “சரி போ... போய் கண்டுபிடி,” என்றார்.

ஞானோதயம் அடைந்தவள் என்பதால், மேலும் பல வழிமுறைகளைக் கண்டறிய முயன்றாள். பல ஆண்டுகால சாதனாவிற்குப் பிறகு திரும்பினாள். அப்போதும் அவர் சப்தரிஷிகளிடம் அவ்வழிமுறைகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவள் சிவனுடைய மனைவி என்பதால், அவனுக்குப் பக்கத்திலே அமரமுடியும், ஆனால் சிவனுக்கு ஒரு படி கீழே உட்கார்ந்தாள்.

சப்தரிஷிகள் அவளுடைய தோல்வியை அறியவேண்டும் என்று பார்வதி நினைக்கவில்லை. தன் தோல்வியை சிவன் அறிய வேண்டும் என்பதற்காக கீழே உட்கார்ந்தாள். தனது முயற்சியில் தோல்வி அடைந்ததை அவனுக்கு குறிப்பால் உணர்த்தினாள்.

சத்குரு,
ஈஷா யோகா மைய நிறுவனர்
Tags:    

Similar News