ஆன்மிகம்
ஜோதிர்லிங்க தரிசனம்

சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்

Published On 2020-02-17 08:03 GMT   |   Update On 2020-02-17 08:03 GMT
பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் நிகழ்ச்சி நாளை தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, தென் கேரள கிளைகளின் ஒருங்கிணைப்பாளர் பீனா, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரம்மகுமாரிகள் இயக்கம் அகில உலக அளவில் 147 நாடுகளில் 9 ஆயிரத்து 500 கிளைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் ஆன்மிகம், சமூகம் மற்றும் கல்விப்பணியை ஆற்றி வருகிறது. அந்தவகையில் பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் 84-வது திரிமூர்த்தி சிவஜெயந்தி (சிவராத்திரி) விழாவை முன்னிட்டு சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.பி.எப். மைதானத்தில் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, 24-ந்தேதி வரை 7 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை காலை 10 மணியளவில் பசுமை தீர்ப்பாயம் நீதிபதி பி.ஜோதிமணி தொடங்கி வைக்கிறார்.

கண்காட்சியில் 2-ம் நாளான 19-ந்தேதி ஆட்டோ, பஸ் டிரைவர்களுக்கான ‘இனிய வாழ்க்கை பயணம்’ என்ற தலைப்பிலும், 20-ந்தேதி துப்புரவு தொழிலாளர்களுக்கு ‘தூய்மையான பாரதம்’ என்ற தலைப்பிலும், 21-ந்தேதி முதியோர்கள், 22-ந்தேதி மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும், 23-ந்தேதி பொது நிகழ்ச்சிகள் மற்றும் 24-ந்தேதி அர்ச்சகர்கள், பண்டிதர்கள், ஆன்மிகவாதிகளுக்கு சிறப்பு தியானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தமிழ் படைப்பாளிகள், அறிஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மன அழுத்தத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தினசரி மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ‌‌ஷ்ட லட்சுமி, நவதேவிகள் மற்றும் கைலாச திருக்காட்சி போன்றவைகளின் தத்ரூப காட்சிகளும் நடை பெற உள்ளன. பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே இடத்தில் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்களை, கோவில்களில் நேரில் சென்று தரிசித்த அற்புத உணர்வு கிடைக்கும்.

இறைவன் மற்றும் ராஜ யோகம் பற்றிய விழிப்புணர்வு படக்காட்சிகளும் கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளன. இறைவனோடு மனம், புத்தியை இணைய வைக்கும் தியான பயிற்சி குடிலும் அமைந்துள்ளது. மனிதனின் 5 தத்துவங்கள், இறைவன் பற்றிய வீடியோ காட்சிகளும் இடம் பெற்று உள்ளன.

இந்த கண்காட்சி 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியை சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த ராஜயோக ஆசிரியை கலாவதி மற்றும் ராஜன், ஜானகி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News