ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரியகோவிலில் 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2020-02-17 04:33 GMT   |   Update On 2020-02-17 04:33 GMT
தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பின்னர் குடமுழுக்கு விழா கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. கடந்த 1-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கிய நாள் முதல் குடமுழுக்கு நடைபெற்ற நாள் வரை 13 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து மறுநாள்முதல் மண்டலாபிஷேக பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேக பூஜை வருகிற 29-ந்தேதி நிறைவடைகிறது.

குடமுழுக்கு நடைபெற்ற பின்னரும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. நேற்று முன்தினமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலைமுதலே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாலையிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை திலகர் திடல், ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, கோர்ட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரியகோவில் வழியாக மாலை நேரத்தில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
Tags:    

Similar News