ஆன்மிகம்
மயானக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.

கடலூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் தொடங்கியது

Published On 2020-02-17 04:32 GMT   |   Update On 2020-02-17 04:32 GMT
கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை உற்சவ கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணியளவில் கடலூர் கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் புறப்பட்டது. இந்த கரகம் லாரன்ஸ்சாலை, வண்டிப்பாளையம் சாலை வழியாக காலை 10 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கோவில் கொடிமரத்தில் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் 6-வது நாளான வருகிற 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்திலும், தாண்டவராயர் ரி‌‌ஷபவாகனத்திலும் பரிவேட்டை மற்றும் வீதி உலா நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை வருகிற 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 11.30 மணி அளவில் அம்மன் பூதவாகனத்தில் மயானம் சென்று மாயனக்கொள்ளையிட்டு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் ஆர்.பி.நாகராஜன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பருவதராஜகுல சமூகத்தினர் செய்து வருகிறார்கள். 
Tags:    

Similar News