ஆன்மிகம்
ருது ஜாதகமும், பெண்ணின் வாழ்க்கை ரகசியமும்

ருது ஜாதகமும், பெண்ணின் வாழ்க்கை ரகசியமும்

Published On 2020-02-15 06:51 GMT   |   Update On 2020-02-15 06:51 GMT
ருது ஆகும் போது ஜாதக பலனை கணிப்பதால் நாம் ஒரு பெண்ணின் வாழ்வை பற்றி என்ன ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஒரு பெண்ணின் வாழ்வில் எவ்வளவோ ரகசியங்கள் இருக்கின்றன! சில ரகசியங்களை தெரிந்து கொள்ளும் போது வாழ்வின் மீதான ஆச்சரியங்களும், சுவராசியமும் அதிகரிக்கிறது.

இந்த உலகிற்கு ஒரு உயிரை கொடுப்பவள் பெண்! வேண்டுமென்றால் அதில் ஆணின் பங்கு சிறிது இருக்கலாம். ஆனால் ஓர் உயிரை தன்னுள்ளே சுமந்து பாதுகாத்து பிரசவித்து, வாழும் தெய்வமாக ஆகிறாள் பெண். அதனால் நாம் பெண்ணை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்கிறோம்! அதனால் தான் மண்ணுக்கு உயிரை கொடுக்கக் கூடிய நதிகள் முதற்கொண்டு அனைத் திற்கும் பெண் பெயரை வைத்தார்கள்! “பெண்ணின்றி அமையாது உலகு” என்றார்கள் முன்னோர்கள்!

பெண் தனது 7-ம் வயதில் பேதை எனும் பருவத்தையும், 11-ம் வயதில் பெதும்பை எனும் பருவத்தையும், 13-ம் வயதில் மங்கையாகவும், 19-ம் வயதில் மடந்தையாகவும், 25-ம் வயதில் அரிவையாகும், 31-ம் வயதில் தெரிவையாகவும், 40-ம் வயதில் பேரிளம் பெண்ணாக மொத்தம் ஏழு பருவங்களை அடைகிறாள். அதில் மூன்று பிறவிகள் எடுக்கிறாள்.

பிறக்கும் போது ஒரு பிறவி!
பருவம் அடையும் போது ஒரு பிறவி!
ஒரு உயிரை பிரசவிக்கும் போது ஒரு பிறவி!

ஒரு உயிரை கொடுத்து, வாழும் தெய்வமாக இருப்பதால்தான் முதலில் வணங்க வேண்டியது பெற்றவளைதான் என்கிறது மனுதர்மம். பிறக்கும் போது ஒரு பெண்ணின் வாழ்வை பற்றி அறிய ஜாதகம் எழுதி பார்ப்போம். ருது ஆகும் போது ஜாதக பலனை கணிப்பதால் நாம் ஒரு பெண்ணின் வாழ்வை பற்றி என்ன ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

ருது என்றால் பருவம் என்று பொருள். அதாவது ஒரு பெண் பருவம் அடையும் நேரத்தை அடிப்படையாக கொண்டு கணிப்பதே ருது ஜாதகம் ஆகும்.
மொட்டாக இருந்து பூவாக மலர்வதை போல ஒரு பெண் பருவம் அடைகிறாள். அதன் பின்னர் அந்த பெண்ணின் வாழ்வும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.
நவக்கிரகங்களையும், நட்சத்திரங் களையும் கணித்து பார்ப்பது எதற்காக என்றால் மனித வாழ்வை வழிநடத்த, செழுமையாக்க, சோதனைகளும் துன்பங்களும் வரும்போது அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ளதான். அதற்காக உருவாக்கபட்டதுதான் ஜோதிட கலை!

எந்த நவக்கிரகங்களும் மனிதர்களுக்கு தீமை செய்யாது. எந்த நட்சத்திரங்களும் மனித வாழ்வை கெடுக்காது! இந்த பூமியில் பிறந்த மனிதர் தன் வாழ்வில் என்ன விதமான பலன்களை அடையப்போகிறார் என்பதை நவக்கிரகங்கள் மூலம் அறிகிறோம். போன பிறவியில் செய்த நன்மை, தீமைகளுக்கேற்ப ஒருவனுக்கு இந்த பிறவியில் வாழ்வு அமைகிறது.

நமக்கு சோதனையான காலகட்டங்கள் வரும் போது அதற்கு தகுந்தாற்போல் அந்த துன்பங்களில் இருந்து தப்பிக்கவே நாம் ஜாதகம் பார்த்து எந்த கிரகங்களினால் துன்பமோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்கிறோம்.

விதி என்பது மழை பெய்வது போல்!
பரிகாரம் என்பது மழைக்கு குடை பிடித்து நனையாமல் இருப்பது போல்!
மழையை நிறுத்தும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால் குடையை பிடித்து தற்காத்து கொள்ளலாம்தானே! அதே போல் விதியின் பலாபலன்களை கூறும் வானிலை அறிக்கையே ஜோதிட ரகசியம்.

ஒரு பெண் எப்போது பருவம் அடைகிறாள், அதன் பலன்கள் என்ன என விரிவாக பார்ப்போம்! நமது உடம்பில் ரத்தத்தை குறிக்க கூடிய கிரகம் செவ்வாய். அந்த செவ்வாயே ஒரு பெண் பருவம் அடைய முக்கிய காரணம். கூடவே சுக்கிரனும், குருவும் ஒத்துழைக்கும். ஒரு பெண்ணுக்கு வரக்கூடிய கணவர் எப்படிபட்டவர், என்ன மாதிரியான குணங்களை கொண்டவர் என்பதை சுக்கிரன் குறிக்கும். பெண்ணின் ரத்தத்தின் தன்மையை செவ்வாய் குறிக்கும், உயர்வான வாழ்வை குரு குறிக்கும்.

எல்லா பெண்களும் தனக்கு வரக்கூடிய கணவர் அழகானவராக, தைரியம் கொண்டவராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த வீரத்தையும், தைரியத்தையும் கொடுப்பவர்தான் செவ்வாய். பெண்ணின் ருது ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையை கொண்டு வரக்கூடிய கணவர் தைரியமானவரா,வீரமானவரா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஜென்ம ஜாதகத்தில் சந்திரன் 1,2,4,5,7,9,11 இந்த இடங்களில் சஞ்சரிக்கும். அதை செவ்வாய் பார்க்கும் போது பெண் ருதுவாகிறாள்.

ஒரு பிறந்த குழந்தையின் ஜாதகத்தை கணிக்கும் போது எப்படி ஆண்காலம் பெண்காலத்தை அடிப்படையாக வைத்து ஜாதகம் கணிக்கிறமோ, அதே போல் ஒரு பெண் ருதுவான நேரம் சொல்லும் போது அந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை ஒப்பிட்டு நேரத்தை சரிபார்த்து கொள்ள வேண்டும். அப்படியும் ஒரு பெண் ருதுவாகும் நேரம் தெரிய வில்லை என்றாலும் ருது ஜாதகம் குறிக்கனும்... எப்படி என பார்ப்போம்! பொதுவாக ஒரு ஜோதிடத்தை கணிக்க லக்கினம் தான் முக்கியம். அதில் இருந்து தான் கிரகங்களின் நிலையை கணிப்போம்.

அதனால் ருதுவான லக்கினத்தை கண்டுபிடிப்பது ரொம்ப முக்கியமாகும்.அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதாவது ருதுவான பொழுது ஒரு பெண் வீட்டின் எந்த பகுதியில் இருந்தாள் அல்லது வெளியே எங்கிருந்தாள் என்பதை சரியாக தெரிந்து கொண்டால் சிறந்த ஜோதிடரால் லக்கினத்தை கணிக்க முடியும். அதே போல் ஒரு பெண் தோராயமாக ருதுவான நேரத்தை சொன்னால் கூட சிறந்த ஜோதிடரால் சரியாக கணிக்க முடியும். உதாரணமாக சித்திரை மாதம் வீட்டின் கொல்லைப் புறமாகவோ அல்லது தோட்டத்திலோ ஒரு பெண் ருதுவானால் அந்த பெண் ருதுவான லக்னம் மேஷ லக்னம் அல்லது சிம்ம லக்னமாகும்.

இது எப்படி என நீங்கள் கேட்கலாம். பொதுவாக தோட்டத்தில் பெண் மூன்று வேளைகளில் ருது ஆவாள்! அதாவது காலை பொழுது, நண்பகல், மாலை அதாவது அந்தி சாயும் நேரம். தோட்டத்தில் காலையில் ருதுவானால் மேஷம், மதியம் என்றால் சிம்மம். அதாவது மேஷ லக்கினத்திற்கும், சிம்ம லக்கினத்திற்கும் ஆறு மணி நேரம் வித்தியாசம் வரும்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ருதுவாகும் மாதம் மாற மாற லக்கினங்களும் மாறுபடும். இதில் இன்னொரு கணக்கும் உள்ளது. மாடு கட்டும் இடங்களிலோ, விவசாய பொருட்கள் இருக்கும் இடங்களிலோ ருதுவானால் சூரிய உதயத்திற்கு இரண்டு நாழிகைக்கு பிறகு தான் ருது ஆவாள். உதாரணமாக சித்திரையில் இப்படி பெரிய பெண்ணாக ஆனாள் ரிசப லக்கினம் வரும்.

ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் ருதுவானால் துலாம் அல்லது கன்னியா லக்னமாகும். பகலிலோ அல்லது மாலையிலோ தூங்கி எழுகையில் ஒரு பெண் ருதுவானால் தனுசு லக்னம். வீட்டிற்கு உள்ளேயே பகலில் ருதுவானால் கன்னி லக்னம். வீட்டிற்கு உள்ளேயே இரவில் ருதுவானால் மகர லக்னம். ஆற்றங்கரை, கடற்கரையில் ருதுவானால் கடக லக்னம். அதேபோல் கிணறு, குளத்தங்கரையில் ருதுவானால் மீன லக்னம்.

இந்த லக்கின கணக்குகள் சித்திரை மாதம் பெரிய பெண் ஆகுபவர்களுக்கும் மட்டும்தான். மாதம் மாறினால் லக்கினங்களும் மாறும். ஒரு பெண் பிறந்த ஜாதகத்தில் அந்த பெண்ணுடைய கல்வி, எதிர்காலம், கணவர், தாய் தந்தை என அனைத்து பலன்களையும் உணரலாம். ருது ஜாதகத்தில் திருமண வாழ்வு, பெற்றோர்கள் நிலமை, புத்திர பாக்கியம், தாம்பத்ய வாழ்வு, அந்த பெண்ணின் கருப்பை தன்மை, உடலின் தட்பவெட்பம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

சில பெண்களுக்கு மாதம் ஒதுங்கும் போது கடுமையான வயிற்றுவலி இருக்கும், சிலருக்கு லேசாக இருக்கும். சிலருக்கு செயல்படாத முடியாத அளவுக்கு உடல் நிலை இருக்கும், சிலருக்கு மாதவிடாய் பிரச்சினை இருக்கும். இதற்கான காரணத்தை ருது ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம். பருவம் அடைந்த பெண் மனக்குழப்பத்துடன் ஒரு வித அச்ச உணர்வுடன் இருக்கிறாள். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு சேலையை கட்டுகிறார்கள், சடங்கு வைக்கிறார்கள். அந்த சின்னப்பெண்ணுக்கு என்ன புரியும்? என நாகரிக வாழ்வில் வாழும் மேல் தட்டு மனிதர்கள் அங்காலாயித்து கொள்வார்கள்.

அச்சமும், பயமும், படபடப்பும் இருக்கும் பெண்ணை அலங்கரித்து சடங்கு செய்வது,“பெண்ணே உனக்குள் உருவாகி இருக்கும் இந்த மாற்றம் மகிழ்ச்சிக்கு உரியது. அதனால் நீ பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை”என்பதை உணர்த்துவதே உற்றார், உறவினர் கூடி சடங்கு வைபோகம் நடத்துவது.
பெண்கள் ருது ஆகும் கிழமைகள், மாதங்கள், நட்சத்திரங்கள், திதிகள் என ஒவ்வொரு விசயத்திற்கும் தனி தனி பலன்கள் உண்டு! 
Tags:    

Similar News