ஆன்மிகம்
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-02-15 05:43 GMT   |   Update On 2020-02-15 05:43 GMT
மாசி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஷேச பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். இதேபோல் ஆண்டுதோறும் வரும் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமை, மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.

இந்த விழாக்களின் போது மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதன்படி மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நன்பகலில் நடைபெற்ற உச்சிகால பூஜையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி தலைமையில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News