ஆன்மிகம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2020-02-15 05:41 GMT   |   Update On 2020-02-15 05:41 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அக்கிள்நாயுடு தெருவின் எதிரே சாலையோரத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செடல் மற்றும் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் மற்றும் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் நதிக்கரையில் இருந்து மேள தாள இசையுடன் சக்தி கரக ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் கம்மியம்பேட்டை சாலை, மாரியம்மன் கோவில் தெரு, அக்கிள்நாயுடு தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணியளவில் பக்தர்கள் தங்கள் உடலில் செடல் போட்டுக்கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

அதே வேளையில் மங்கல வாத்திய இசை முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாலம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க அங்கே திரண்டு நின்றவர்கள், ஓம் சக்தி, பராசக்தி என கோ‌‌ஷம் எழுப்பினர்.

பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி, அசைந்தாடியபடி அக்கிள்நாயுடு தெரு, போடி செட்டித்தெரு, தேரடித்தெரு, சங்கரநாயுடுதெரு வழியாக வந்து மாலை 4 மணியளவில் கோவில் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. இதில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய் திருந்தனர்.
Tags:    

Similar News