ஆன்மிகம்
கலசங்கள் தங்க முலாம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரியகோவிலில் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி நிறைவு

Published On 2020-01-29 06:27 GMT   |   Update On 2020-01-29 06:27 GMT
தஞ்சை பெரியகோவிலில் கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி நிறைவடைந்தது. இந்த கலசங்களை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து நாளை(30-ந் தேதி) மீண்டும் பொருத்தப்படுகிறது.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜை தொடங்கியுள்ளது. முதல் கால யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி மாலை தொடங்குகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி பெரியகோவில் கோபுரங்கள், மதில்சுவர்கள், சன்னதிகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தெய்வங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியும் நடந்துள்ளது. சிதைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

திருப்பணிக்காக பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தில் 12 அடி உயரம், 4½ அடி அகலத்துடன் கூடிய செம்பினால் ஆன கலசம் கழற்றப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டன. அதேபோல் மற்ற சன்னதி கோபுரங்கள், கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்த கலசங்களும் கழற்றப்பட்டன.

இந்த கலசங்கள் எல்லாம் மராட்டா விநாயகர் சன்னதி அருகே திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நிறைவடைந்ததையொட்டி அனைத்து கோபுர கலசங்களும் தங்கமுலாம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலசங்களின் தற்போதைய தன்மை குறித்து அறிந்து கொள்ள கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரும் நேற்று தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொரு கலசத்தின் பாகங்கள் எவ்வளவு எடையில் இருக்கிறது என பழைய ஆவணங்களின் அடிப்படையில் எடை எந்திரத்தின் உதவியுடன் சரிபார்த்தனர்.

பெருவுடையார் சன்னதியின் கோபுர கலசம் 3 பெரிய பாகங்களாலும், 5 சிறிய பாகங்களாலும் ஆனது. இவற்றின் எடையை சரிபார்த்த அதிகாரிகள் பெரியநாயகி அம்மன், முருகன், வராகி, தட்சிணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர், கருவூரார் ஆகிய சன்னதிகளின் கலசங்கள், மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரத்தின் கலசங்களின் எடையையும் சரிபார்த்தனர். பின்னர் அவர்கள், கலசங்களின் உலோக தன்மையை நவீன கருவியின் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

இந்த கலசங்கள் அனைத்திற்கும் நாளை(30-ந் தேதி) சிறப்பு பூஜை செய்யப்பட்டு மீண்டும் கோபுரங்களில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோபுர கலசகங்கள் வைக்கப்பட்டுள்ள திருச்சுற்று மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News