ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு காட்சி அளித்ததையும் படத்தில் காணலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம்

Published On 2020-01-29 05:19 GMT   |   Update On 2020-01-29 05:19 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நேற்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு மீன லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் இணை கமிஷனர் நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தெப்பத்திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவின் 6-ம் நாள் திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8-ம் நாள் மச்சகந்தியார் திருமண காட்சியும் நடைபெறும். 10-ம் நாள் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், 11-ம் நாள் அனுப்பானடியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா பிப்ரவரி 8-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவார்கள். பின்னர் பக்தர்கள் அங்கு வடம் பிடித்து இழுத்து தெப்பத்தை 2 முறை வலம் வருவார்கள். பின்னர் சுவாமி மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வருவார். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள். மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி அன்றைய தினம் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
Tags:    

Similar News