ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலில் புதிதாக கொடிமரம் நடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரியகோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

Published On 2020-01-28 05:55 GMT   |   Update On 2020-01-28 05:55 GMT
தஞ்சை பெரியகோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந் தேதி(புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராஜராஜன் நுழைவுவாயில், கேரளாந்தகன் நுழைவுவாயில் ஆகியவற்றிலும், 216 அடி உயரமுள்ள விமான கோபுரத்திலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக திருச்சுற்று மண்டபங்கள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், நடராஜர், வராகி உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணிகள் நடைபெற்றன.

பெரிய கோவிலின் நந்திகேஸ்வரர் மண்டபத்தின் முன்பாக உள்ள கொடிமரம் பழுதடைந்ததை தொடர்ந்து புதிதாக கொடிமரம் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பர்மாவில் இருந்து 40 அடி உயர தேக்குமரம் வரவழைக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த செல்வராஜ் ஆசாரி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக இந்த கொடிமரத்தை வடிமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 39½ அடி உயரத்தில் கொடிமரம் தயார் செய்யப்பட்டு பாலீஷ் செய்யப்பட்டது.

நேற்று பெரியகோவிலில் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் முடிந்த பின்னர் புதிதாக செய்யப்பட்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.. இரும்பு சங்கிலி மூலம் கொடிமரம் இணைக்கப்பட்டு மேலே தூக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கொடிமரத்தின் பிரம்மபாகம் 5½ அடியும், விஷ்ணுபாகம் 5½ அடியும் கொண்டது. இந்த 11 அடியும் தரைப்பகுதி மற்றும் கொடிமர பீடத்தின் மட்டத்திற்குள் அடங்கும்.

இந்த 11 அடி உயரத்திற்கும் 40 கிலோ எடை கொண்ட தாமிர தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதாவது கொடிமரத்தின் அடிப்பகுதி சேதம் அடையாமல் இருப்பதற்காக இந்த தாமிர தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் 28½ அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News