ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா தேரோட்டம்

Published On 2020-01-28 05:10 GMT   |   Update On 2020-01-28 05:10 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11-ம் நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு நடைதிறப்பு, தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, பகல் 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளல் போன்றவை நடந்தது.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது. தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல் பால. லோகாதிபதி, யுகேந்த், வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக சுற்றி மாலை 3 மணியளவில் தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. இரவில் அய்யா ரிஷப வாகனத்தில் தெருவை சுற்றி வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தலைமை பதியின் முன்பகுதியில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News