ஆன்மிகம்
முருகன்

பெயரெல்லாம் முருகனே..

Published On 2020-01-27 08:51 GMT   |   Update On 2020-01-27 08:51 GMT
முருகப்பெருமானின் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கான காரணத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாக வெளிப்பட்டு, சரவணப் பொய்கையில் தோன்றியவர் முருகப்பெருமான். அவருக்கு இதைத் தவிர கந்தன், குமரன், வேலவன், ஆறுமுகன், குகன் என்று பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கான காரணத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

முருகன்

‘முருகு’ என்றால் ‘அழகு’ என்று பொருள். இந்த சொல்லுக்கு இளமை, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல அர்த்தங்கள் உள்ளன. ஆதலால் முருகப்பெருமான், மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும், நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத தேன் இனிமையும் கொண்டவர் என்று பொருள் கொள்ளலாம். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் ஒவ்வொன்றுடனும் ‘உ’ என்னும் உயிரெழுத்து இணைந்து ‘முருகு’ என்றாயிற்று. இந்த மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிப்பதாக சொல்வார்கள்.

ஆறுமுகன்

சிவபெருமானுக்கு தத்புருஷம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என ஐந்து முகங்கள். இவற்றுடன் சக்தியின் அதோமுகமும் இணைந்து ஆறுமுகமாக தோன்றியதால் முருகப்பெருமானுக்கு ‘ஆறுமுகன்’ என்று பெயர் வந்தது. இதன் மூலம், முருகப்பெருமான் சிவரூபமாகவும், சக்தி ரூபமாகவும் திகழ்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளலாம். திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வரியம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

குகன்

மனம் என்னும் குகையில் வசிப்பவர் என்பதால் ‘குகன்’ என்று பெயர் பெற்றார். இவர் அந்த குகையையே தகராகாசமாக எண்ணி வீற்றிருப்பவர். ‘தகராகாசம்’ என்றால் ‘பொற்சபை’ என்று பொருள். அடியார்களின் மனக் கோவிலில் தங்கியிருப்பவர் என்பதாலும் ‘குகன்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள்.

கந்தன்

‘கந்து’ என்றால் நடுவில் இருப்பது என்று பொருள். சிவபெருமானுக்கு, உமாதேவிக்கும் இடையில் இருப்பதால் ‘கந்தன்’ என்னும் பெயர் ஏற்பட்டது. ‘ஸ்கந்தர்’ என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலமையுடையவன் என்றும் பொருள் கூறுகிறார்கள்.

சரவணபவன்

‘சரவண பவ’ என்னும் ஆறு அட்சரத்தையும் கொண்டவா் என்பதால் ‘சரவணபவன்’ என்ற பெயர் வந்தது. ‘சரவணபவன்’ என்றால் ‘நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றி யவன்’ என்று பொருள். ‘ச’ என்றால் மங்களம், ‘ர’ என்றால் ஒளிகொடை, ‘வ’ என்றால் சாத்வீகம், ‘ண’ என்றால் வீரம் என்று இத்தகைய சிறப்புகளுடன் தோன்றியவர் முருகப்பெருமான்.

சகரம் என்றால் உண்மை. ரகரம் என்றால் விஷ நீக்கம், அகரம் என்றால் நித்ய திருப்தி, ணகரம் என்றால் நிர்விடமயம், பகரம் என்றால் பாவ நீக்கம், வகரம் என்றால் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

வேலவன்

சூரபதுமனை அழிப்பதற்காக புறப்பட்ட முருகப்பெருமானுக்கு, அன்னை பராசக்தி சக்திமிகுந்த வேல் ஒன்றை வழங்கினார். அந்த வேலைக் கொண்டுதான் சூரபதுமனுடன் முருகன் போரிட்டார். போரின் முடிவில் மாமர வடிவம் கொண்டு நின்ற சூரனை நோக்கி வேலை வீசினார். அது மாமரத்தை இரண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் மாறியது. வேலை கையில் ஏந்தியதால் ‘வேலவன்’ என்று அழைக்கப்பட்டார்.

விசாகன்

‘விசாகன்’ என்பதற்கு ‘பட்சியின் மேல் சஞ்சரிப்பவர்’ என்று பொருள். வி- பட்சி, சாகன் - சஞ்சரிப்பவர். பட்சி என்றால் பறவை என்று அர்த்தம். மயில் பறவையை வாகனமாகக் கொண்டவர் முருகப்பெருமான். அதே போல் சேவலைக் கொடியாகக் கொண்டவர். இது பறவைகளிடம் இறைவனுக்கு உள்ள ஒப்பற்ற கருணையைக் காட்டுகிறது. மயில் வாகனத்தில் வலம் வருபவர் என்பதால், ‘விசாகன்’ என்று அழைக்கப்படுகிறார்.

தொகுப்பு: பிரபாவதி மாணிக்கம்
Tags:    

Similar News