ஆன்மிகம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யா வைகுண்டசாமி கலிவேட்டை நிகழ்ச்சிக்கு புறப்பட்ட போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை நிகழ்ச்சி

Published On 2020-01-25 06:27 GMT   |   Update On 2020-01-25 06:27 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு திருநடை திறப்பும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது.

மாலையில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் கலி வேட்டைக்கு புறப்படுவதற்காக பள்ளி அறையில் இருந்து குதிரை வாகனத்திற்கு எழுந்தருளினார். நிகழ்ச்சியை பாலபிரஜாபதி தொடங்கி வைத்தார். குதிரை வாகனம் தலைமைப்பதி மற்றும் பெரிய ரத வீதியை சுற்றி வந்து புகழ்பெற்ற முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.

அங்கு அய்யா வைகுண்டசாமி காவி உடையணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடிபுதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாகனம் சென்ற இடங்களில் அப்பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர். இரவு 11 மணி அளவில் வாகன பவனி தலைமைப்பதியில் வடக்கு வாசலில் முடிவடைந்தது. பின்னர் அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

9-ம் நாள் விழாவான இன்று (சனிக்கிழமை) அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திர வாகன பவனியும், 27-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
Tags:    

Similar News