ஆன்மிகம்
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்ததை காணலாம்

தஞ்சை பெரியகோவிலில் வருகிற 27-ந்தேதி பூர்வாங்க பூஜைகள் தொடக்கம்

Published On 2020-01-25 04:39 GMT   |   Update On 2020-01-25 04:39 GMT
வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வருகிற 27-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது.
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் வருகிற 27-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

மறுநாள்(28-ந் தேதி) கணபதி ஹோமம், தனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக ஹோமம் நடக்கிறது. 29-ந் தேதி சாந்தி ஹோமமும், 30-ந் தேதி மூர்த்தி ஹோமமும், 31-ந் தேதி கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜையும் நடக்கிறது. மேலும் அன்றைய தினம் பள்ளியக்கிரஹாரம் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்படுகிறது.

1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல்கால யாகபூஜை தொடங்குகிறது. 2-ந் தேதி 2-ம் கால மற்றும் 3-ம் காலபூஜையும், 3-ந் தேதி 4-ம் கால மற்றும் 5-ம் கால பூஜையும், 4-ந் தேதி 6-ம் கால மற்றும் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

5-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடக்கிறது. காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடக்கிறது.

காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு பெரியநாயகி, பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெரியநாயகி, பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

கும்பாபிஷேக தினத்தன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நந்திமண்டபத்தில் திருமுறை பாராயணம் நடக்கிறது. 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடராஜர் மண்டபத்தில் திருமுறை பண்ணிசை அகண்ட பாராயணமும், யாகசாலையில் திருமுறை பண்ணிசை அரங்கமும் நடக்கிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில் தற்காலிக பஸ் நிறுத்தங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், கோவில் முன்பு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளன.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பாதுகாப்பு வசதிக்காக கோவிலில் 32 கண்காணிப்பு கேமராக்களும், நகரை சுற்றிலும் அனைத்து இடங்களிலும் 160 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

இது குறித்து கும்பாபிஷேக விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை கண்காணிக்க 192 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வுகளை மக்கள் பார்க்கும் வகையில் 10 இடங்களில் அகன்ற திரையுடன் கூடிய டி.வி.க்களும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகர் முழுவதும் அறிவிப்புகளை வெளியிடும் வகையில் ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக ரூ.50 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கிராமிய நிகழ்ச்சிகளும், பத்மா சுப்பிரமணியத்தின் பரதநாட்டியமும் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது விழாக்குழு உறுப்பினர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமே‌‌ஷ், சேகர், சாவித்திரி கோபால், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அம்மாப்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் பஸ்களை நிறுத்துவதற்காக தஞ்சை கீழவஸ்தாசாவடியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News