ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவிலில் தைத்திருவிழா 28-ந்தேதி தொடக்கம்

Published On 2020-01-24 06:46 GMT   |   Update On 2020-01-24 06:46 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத திருவிழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் சிறப்பு வாய்ந்த தெப்பத்திருவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, தை, பங்குனி மாத திருவிழா சிறப்பு வாய்ந்தவை. அதில் தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா நடைபெறும் தெப்பக்குளம் காமராஜர் சாலையில் மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது. 1000 அடி நீளம், 950 அடி அகலம், 16 அடி உயரம் கொண்ட பெரிய தெப்பக்குளமாகும்.

இந்த தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து பனையூர் வாய்க்கால் மற்றும் சொட்டதட்டி வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வருமாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வராமல் இருந்தது.

அதனை சீர்செய்து தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் 16-கால் மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வண்டல் மண் நிறைந்த 2 கிணறுகள் மூலம் தண்ணீர் வடி கட்டப்பட்டு தெளிந்த நீராக தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு தெப்பக்குளம் தண்ணீரால் நிறைந்து அழகாக காட்சி அளிக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குளத்தில் வருகிற 8-ந் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி வருகிற 28-ந் தேதி சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, இரவு என இரு வேளையும் நான்கு சித்திரை வீதிகளை வலம் வருவர். விழாவின் 6-ம் நாள் திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8-ம் நாள் மச்சகந்தியார் திருமணக்காட்சியும் நடைபெறும். 10-ம் நாள் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், 11-ம் நாள் அனுப்பானடியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா பிப்ரவரி 8-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவார்கள். பின்னர் பக்தர்கள் அங்கு வடம் பிடித்து இழுத்து தெப்பத்தை 2 முறை வலம் வருவார்கள். பின்னர் சாமி மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வருவர். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள். மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி அன்றைய தினம் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மூலஸ்தான அம்மனுக்கு முக்கிய நாட்கள், விழாக்களின் போது வைரக் கிரீடம், தங்க பாவாடை சாத்தப்படும். இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி இன்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் மூலஸ்தான மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம், தங்க பாவாடையிலும், சுந்தரேசுவரர் சாமி வைர நெற்றிப்பட்டையிலும் காட்சி அளிப்பர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News