ஆன்மிகம்
அஷ்டபந்தன மருந்து கலவை தயார் செய்யப்பட்டதையும், சிறப்பு யாகம் நடை பெற்றதையும் படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது

Published On 2020-01-21 03:33 GMT   |   Update On 2020-01-21 03:33 GMT
பழனி முருகன் கோவிலில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. தற்போது பழனி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் நேற்று அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று பூஜை நேரங்கள் மாற்றப்பட்டன.

அதன்படி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 5.40 மணிக்கு விளாபூஜை, 6.10 மணிக்கு சிறுகாலசந்தி, 6.20 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. அதையடுத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிவானம், மூலமந்திரம் யாகம் நடைபெற்று, அஷ்டபந்தனம் (8 மூலிகை பொருட்கள்) இடிக்கப்பட்டு மருந்து தயார் செய்யப்பட்டது. அந்த மருந்து மூலவர் சன்னதியில் உள்ள சிலைக்கும், பீடத்துக்குமான இடைப்பகுதியில் வைத்து சாத்தப்பட்டது. இந்த அஷ்டபந்தன மருந்துக்கான பொருட்கள் தருமை ஆதீனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கான ஏற்பாடுகளை சிவசண்முக குருக்கள், பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சர்வசாதகம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் குமரவேல், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், கண்பத் கிராண்ட ஹரிகரமுத்து, கந்தவிலாஸ் பாஸ்கரன், சாய்கிருஷ்ணா சுப்புராஜ், கரூர் பழனிமுருகன் நகைக்கடை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



பழனி முருகன் கோவிலில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியையொட்டி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை கோவில் நடைகள் அனைத்தும் சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் யாரும் இன்றி மலைக்கோவில் நேற்று காலை வெறிச்சோடி காணப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் உச்சிகால பூஜை நடைபெற்றபோது, பக்தர்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் அமைவிடம், பூஜைகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆகமவிதிமுறைகள் இருக்கின்றன. பொதுவாக கோவிலை கட்டி முடித்த பிறகு, சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ஒரு பீடத்தின் மீது சிலையை வைக்கும்போது அது, அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற 8 விதமான பொருட்கள் கலந்த மருந்து சாத்தப்படும். அந்த மருந்து, சிலையை பீடத்துடன் அழுத்தமாக இணைத்து பிடித்துக்கொள்ளும். பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலைக்கு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டு வருகிறது.

அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் ஆகிய 8 பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த 8 பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு குறிப்பிட்ட பதம் வரும்வரை இடிக்கப்படும். மருந்துகளை கலந்து இடிக்கும் உரல், உலக்கை வைக்கும் பாத்திரங்கள் ஆகியவை தூய்மையாக இருப்பதுடன், அவற்றை தயாரிப்பவர்கள் உடல் மற்றும் மன தூய்மையோடும், இறை சிந்தனையோடும் இருக்க வேண்டும். மேலும் பொருட்களின் அளவு, இடிக்கும் நேரம் ஆகியவையும் ஆகம விதிப்படி கடைபிடிக்கப்படுகிறது.
Tags:    

Similar News