ஆன்மிகம்
அனுமன்

அனுமனின் வரலாறு

Published On 2020-01-20 06:58 GMT   |   Update On 2020-01-20 06:58 GMT
ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்கு பிறக்கும் மகன் எனது அம்சமாக தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள்.

திருமணம் முடிந்தும் அஞ்சனைக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனை குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனை பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.

தர்மதேவதை கூறியவாறே திருமலைக்கு சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியை பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்த கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.

ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களை காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்று தரும் என்பது நம்பிக்கை.
Tags:    

Similar News