ஆன்மிகம்
பழனி கோவில்

பழனி மலைக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி

Published On 2020-01-17 06:45 GMT   |   Update On 2020-01-17 06:45 GMT
பழனி மலைக்கோவிலின் மூலவர் பீடத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தனம் மருந்து சாத்தப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி வருகிற 20-ந்தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு மலைக்கோவில் சன்னதி திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 5.40 மணிக்கு விளா பூஜை, காலை 6.10 மணிக்கு சிறு காலசந்தி பூஜை, 6.20 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற உள்ளது.

அஷ்டபந்தனம் மருந்து சாத்துவதற்காக அன்று காலை 6.30 மணி முதல் கோவிலில் உள்ள சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடக்கிறது.

எனவே காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு மேல் உச்சிகால பூஜை நடைபெறும். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News