ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 1-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-12-16 06:56 GMT   |   Update On 2019-12-16 06:56 GMT
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. ஐம்பூதங்களில் ஆகாய தலமாக விளங்கி வரும் இக்கோவில் சபாநாயகர் கோவில், நடராஜர் கோவில் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் ஆனந்த திருத்தாண்டவம் ஆடும் கோலத்தில் அருள்புரியும் இந்த கோவில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்சபை, கனகசபை, தேவ சபை, நிருத்தசபை அல்லது நடனசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன.

நடராஜர் வீற்றிருக்கும் இடம் சித்சபை. இங்கு தான் தினந்தோறும் நடராஜருக்கு பூஜைகள் நடக்கிறது. இங்குள்ள மூலவரே உற்சவராக ஆனி திருமஞ்சன தரிசன விழாவிலும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவிலும் வெளியே வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காண கிடைக்காத சிறப்பு அம்சமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பரசபாபதி தீட்சிதர் கொடி ஏற்றுகிறார்.

அதனை தொடர்ந்து 2-ந் தேதி (வியாழக்கிழமை) வெள்ளி சந்திரபிரபை வாகனத்திலும், 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தங்க சூர்ய பிரபை வாகனத்திலும், 4-ந் தேதி (சனிக்கிழமை) வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

பின்னர் 5-ந் தேதி வெள்ளி ரி‌‌ஷப வாகனத்திலும், 6-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 7-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 8-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் கோலத்திலும் சாமி வீதிஉலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியில் ஒன்றான தேர் திருவிழா 9-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 5.30 மணிக்கு கோவில் சித்சபையில் இருந்து மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் தனித்தனி தேர்களில் வீதிஉலா நடக்கிறது. 10-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகா அபிஷேகமும், காலை 10 மணிக்கு திருவாபரண அலங்காரமும், மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 11-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News