ஆன்மிகம்
தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்

Published On 2019-12-11 06:41 GMT   |   Update On 2019-12-11 06:41 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சன்னதி தெருவில் உள்ள பதினாறுகால் மண்டபம் அருகே தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வந்து தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையடுத்து கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பியபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கீழரத வீதி, பெரியரதவீதி, மேல ரத வீதி வழியாக தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி நிலைக்கு வந்தது. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

திருக்கார்த்திகை தினமான நேற்று கோவிலுக்கு மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். கோவில் வாசலில் இருந்து அவனியாபுரம் ரோடு சந்திப்பு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளிக்கு மறுநாளில் இருந்து ஒரு வாரம் கோவிலுக்குள் சஷ்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தாமிர கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மலையின் அடிவாரத்தில் இருந்து 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீபமேடையில் தாமிர கொப்பரை வைக்கப்பட்டது.

350 லிட்டர் நெய் மற்றும் நெய்யினால் பதப்படுத்தப்பட்ட 100 மீட்டர் கடா துணியிலான திரி மற்றும் 5 கிலோ கற்பூரம் ஆகியவை தாமிர கொப்பரையில் நிரப்பி தயார்படுத்தப்பட்டது.



மாலை 5.30 மணியளவில் கோவிலுக்குள்ளும் மலையிலுமாக சிவாச்சாரியார்கள் அனுக்ஞை பூஜை, அக்னி பூஜை உள்ளிட்ட சகல பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து கோவிலுக்குள் பெரிய மணி அடித்ததும் மாலை 6 மணி ஒரு நிமிடத்துக்கு கோவிலுக்குள் "பால தீபம்" ஏற்றப்பட்டது. கோவில் மணி ஓசை கேட்ட தும் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. உடனே பட்டாசு வெடிக்கப்பட்டது.

மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபமானது சுமார் 10 அடி உயரத்திற்கு ஜுவாலை விட்டு பிரகாசமாக எரிந்தது அவை கண் கொள்ளாகாட்சியாக இருந்தது.

தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரியங்காபங்கஜம், திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன், இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் நடராஜன்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அதிகாரி முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அகல்விளக்கு ஏற்றினார் கள். இதனால் திரும்பிய திசையெல்லாம் ஒளி மயமாக இருந்தது.

இரவு 7 மணி அளவில் தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப் பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக வலம்வந்து 16 கால் மண்டபம் அருகே எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமான் பார்வையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் விவசாயிகள் பலர் போட்டி போட்டு சொக்கப்பனை சாம்பலை வயலில் போடுவதற்காக அள்ளிச் சென்றனர். திருவிழாவின் இறுதி நாளான இன்று (புதன்கிழமை) தீர்த்த உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News