ஆன்மிகம்
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

Published On 2019-12-11 05:49 GMT   |   Update On 2019-12-11 05:49 GMT
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். இதில் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை காண இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.

மேலும் பலர் கடந்த 1-ந் தேதி கொடியேற்றம் தொடங்கிய நாளில் இருந்து திருவண்ணாமலையில் வந்து தங்கி உள்ளனர்.

தினமும் காலை மற்றும் இரவில் நடைபெறும் சந்திரசேகரர், விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் திருவீதி உலாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு இரவில் கிரிவலம் சென்று சாமியை வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மகா தீபத்தை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

கிரிவலத்தின் போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று சிவ கோஷமிட்டப்படி நடந்து சென்றனர். சிவனடியார்கள் சங்குகள் முழங்கியபடி தேவார பாடல்களை பாடியபடி கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தோளில் தூக்கி சுமந்தபடி சென்றனர்.

பவுர்ணமி தினத்தில் கிரிவலம் சென்று வந்தால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம், மேலும் நாம் எந்த ஒரு காரியத்தை நினைத்து கிரிவலம் சென்று வருகிறோமோ? அந்த காரியம் சிறப்பாக நடந்து விடும் என்பது ஐதீகம். ஆகவே ஒவ்வொரு வருடமும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் செய்து இருந்தது.
Tags:    

Similar News