ஆன்மிகம்
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட தயாராக இருந்த பெண்களை படத்தில் காணலாம்.

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்கல் வழிபாடு

Published On 2019-12-11 05:47 GMT   |   Update On 2019-12-11 05:47 GMT
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் மிக முக்கியமானது. ஆலப்புழை, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களின் எல்லையில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரம் என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவிலில் சர்வேஸ்வரியும், அன்ன பூரணியும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குவதாக கூறப்படுகிறது.

கலியுகத்து தெய்வமாக கருதப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மனின் அருளை பெற பெண்கள் பலர் புண்ணிய சுமையாக இருமுடி கட்டி விரதம் இருந்து கோவிலுக்கு வருகிறார்கள். இதேபோன்று சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் வந்து பகவதி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

சக்குளத்துக்காவு பகவதி அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப் பவர்களும் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.

அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்து வழிபடுதல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கூவி அழைக்கும் பிரார்த்தனைக்கு பிறகு 9 மணிக்கு ராதாகிரு‌‌ஷ்ணன் திருமேனி, பண்டார அடுப்பில் தீயை மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நீண்ட தூரத்திற்கு லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இருபுறங்களிலும்மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் 11 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்யம் செய்யப்பட்டது. பின்னர் பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச்சென்று நிவேத்ய தீர்த்தம் தெளித்தனர். சமுதாயத்தில் சிறந்து விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து சிறப்பிக்கும் நிகழ்வான நாரி பூஜை(பாத பூஜை) வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

Tags:    

Similar News