ஆன்மிகம்
கார்த்திகை தீபம்

சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபம்

Published On 2019-12-10 08:01 GMT   |   Update On 2019-12-10 08:01 GMT
கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவுக்கு வரும். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான்.
கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவுக்கு வரும். இதுவும் தீபாவளி போன்று ஒளி விளக்குகள் விழாதான். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான். சொல்லப் போனால் தீபாவளி, நவராத்திரி ஆகிய பண்டிகைகளை தமிழர்கள் கொண்டாட தொடங்குவதற்கு முன்னதாகவே கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. இதனை அக நானூறு பாடல்களில் காண முடிகின்றது.

இவ்விழாவிற்கும் பல சிறப்பு புராண கதைகள் உள்ளன.

தீபம் மற்றும் தீப ஒளி என்றாலே தீமைகளை அகற்றுவது என்ற பொருளும் கூறப்படுகின்றது. என்ன தீமைகளை அழிக்கின்றது? ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற ஒரு போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபிரான் பெரும் தீப்பிழம்பாகி ஒளிர்ந்தார். இவரது அடியையும், முடியையும் காண பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போட்டி ஏற்பட்டது. பிரம்மா அன்னமாக உருவெடுத்து ஈசனின் முடியினைக் காண உயர்கின்றார். விஷ்ணு வாராக உருவமெடுத்து அவரது அடியினை காண பூமியை தோண்டிக்கொண்டே கீழே செல்கின்றார். இருவரும் எவ்வளவு முயன்றும் அவர்களால் அடி முடியினைக் காண முடியவில்லை.

இதனைத்தான் அடி முடி காண முடியா ‘அண்ணாமலையானே’ என்கின்றோம். அருணாசலா என்பதற்கு புனித ஒளிப்பிழம்பு மலை என்று பொருள். இதனை கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையில் தீபம் ஏற்றி வழிபட்டு மனதில் அகங்காரம், பெறாமை, ஆணவம் என்ற தீமைகளை அகற்றுகின்றோம். மற்றொரு புராண கதையும் உண்டு. முன்பு ஒரு காலத்தில் ஒரு ராஜாவிற்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு வேறு சகோதர, சகோதரிகள் இல்லை. அவள் தன் அரண்மனையில் இருந்த யானையினை மிகுந்த ஆசையோடு வளர்த்து வந்தாள். அவளது திருமணத்திற்குப் பிறகு யானையை பிரிய நேர்ந்தது. தன் சகோதரனைப் பிரிவது போன்ற மன வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது. இதனால் கஜ விளக்கு ஏற்றும் பழக்கம் வந்தது.

யானை வாழ: அரசன் வாழ: பெண் வாழ: பிறந்தகம் வாழ என தீபத் திருநாளன்று தன் சகோதரர் நலனுக்காகவும் பிறந்த வீடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கமும் நம் வழிபாட்டு முறையில் உள்ளது. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதுதான் திருகார்த்திகை விழா. சர்வாலய தீபம் என இந்நாளை கொண்டாடுவர்.

கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று குமராலய தீபம் என முருகன் ஆலயங்களில் வழிபடுவர். கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரமும் வரும். அந்த நாளை விஷ்ணு ஆலய தீபம் என வழிபடுவர். பொதுவாக விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரம் அன்று காலையில் நீராடி கோவிலுக்குச் சென்று பகல் ஒருபொழுது மட்டும் உண்டு கார்த்திகை நட்சத்திரம் முடியும்போது விரதத்தினை முடிப்பர்.

கார்த்திகை திருநாள் அன்று காலை நீராடி பிள்ளையார் பூஜை, குல தெய்வ பூஜை, நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து காலையிலேயே சிவ பூஜையும், குமார பூஜையும் செய்ய வேண்டும். பூஜை என்பது சிவன், முருக அஷ்டோத்தரங்களைக் கூட சொல்லி வணங்கலாம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் நைவேத்தியம் செய்யலாம்.

மாலையில் திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பிறகே வீடுகளில் விளக்கேற்றுவது வழக்கம். பொரி, வெல்லம் சேர்த்த உருண்டை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், அப்பம் இவைகள் நைவேத்தியமாகச் செய்யப்படும். சில குடும்பங்களில் 21 நாட்கள் விரதம் இருந்து நோன்பு கயிறு கட்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. சிலர் மாவிளக்கு போடும் வழக்கமும் உண்டு.

கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். குறைந்தது ஆறு தீபங்களாவது ஏற்றுங்கள் என்று கூறுவர். ஒளி ரூபம் சிவன், அக்னியினில் உருவான முருக பெருமான். காக்கும் கடவுள் விஷ்ணுவிற்கு ஏற்றப்படுபவைதான் இந்த தீபங்கள்.

ஆமாம் தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது?

தீபம் என்பது அக்னி-நெருப்பு. அக்னி தான் நமது வேண்டு தல்களையும், நாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கைகளையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றது என்பது ஐதீகம்.  அக்னி இறைஞானத்தினை அளிப்பது. அக்னி இல்லாமல் வேத சம்பிரதாயங்களே இல்லை. தீபம் ஒருவரின் இறை நம்பிக்கையினை மேலும் உறுதியாக்கி ஆன்மீக பாதை யில் அழைத்துச் செல்லும். தீபம் ஏற்றி வழிபட்டு தீப விளக்கின் பாதத்தில் பூசேர்த்து என் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடு என பிரார்த்திப்பது வழக்கம். இருளை நீக்கும் தீப ஒளி மன இருளினையும் நீக்கும். தீபத்திற்கு தீய சக்தியினை விரட்டி இறை சக்தியினை ஈர்க்கும் சக்தி உண்டு.

தீப கதிர் வீச்சு சுற்று புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப் பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம், உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் இவற்றுக்கு உகந்ததாகக் கூறுகின்றனர். எனவே காலை, மாலை இருநேரமும் வாசலில் நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

நல்ல எண்ணெய்யால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. நீண்ட கால தீரா பிரச்சினைகளால் உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி இவைகளின் பாதிப்பில் உடையவர்கள் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

Tags:    

Similar News