ஆன்மிகம்
கிரிவலம்

செவ்வாய்க்கிழமை கிரிவலம் செழிப்பான வாழ்வைத் தரும்

Published On 2019-12-10 07:55 GMT   |   Update On 2019-12-10 07:55 GMT
செவ்வாய்க்கிழமை அருணாசலமலையை வலம் வந்து வழிபாடு செய்பவர்கள் நிறைவான செல்வங்களை பெற்று செழிப்புடன் வாழ்வார்கள். இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றும் தினம் செவ்வாய்க்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.
உடல், உள்ளம், வாக்கு ஆகியவை மூலம் மனிதன் செய்யும் அனைத்து பாவங்களையும் போக்கடிக்கும் தன்மை அருணாசலமலைக்கு உண்டு. அக்னி தலமான ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தலத்தில் செய்யப்படும் தானங்கள், ஹோமங்கள், சொல்லப்படும் மந்திரங்கள், உடனே சித்தியைத் தருவதுடன் அழிவற்ற அளவற்ற பலன்களை வாரி வழங்குகின்றன என்கிறது ஸ்கந்த புராணம்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் துணியால் திரி செய்து, செப்புக் கொப்பரையில் நெய் தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் சுமார் 7 நாட்கள் வரை இடைவிடாது எரிந்து கொண்டிருக்கும். இதைக் கண்ணால் காண்பதே பெரும் பாக்கியம். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய தினத் தன்று கிரி வலம் செய்வது அளவற்ற புண்ணியத்தைத் தரும். திருவண்ணாமலையில் ஜோதி வடிவமான ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கிரி(மலை) வடிவமாக பிரகாசிக்கிறார். ஆகையால் கிரிவல பிரதட்சணம் செய்வதே விசேஷமான பலன்கள் தரும் வழிபாடாகும்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் மாலையில் பிரதோஷ வேளையில் பார்வதி தேவியும் மகான்களும் மற்றும் சித்தர்களும் முனிவர்களும், ஞானிகளும் சுமார் 14 கி.மீ. அகலமுள்ள மலை வடிவமாக இருக்கும் சிவபெருமானை பிரதட்சணம் செய்ய வேண்டும். அது தான் ஈசனை சுற்றி வந்து வழிபடுவதற்கு சமமான வழிபாடாகும்.

குறைந்த புண்ணியம் செய்தவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்காது. அளவற்ற புண்ணியம் செய்த வர்களுக்கே தீப திருநாளில் கிரிவலம் செய்யும் பாக்கியம் கிட்டும் என்கிறது அருணாசல புராணம். கிரிவலம் பிரதட்சணம் செய்பவர்கள் எதுவும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து மலை சுற்றுதல் செய்ய வேண்டும். அப்போது மவுனமாக மனதுக்குள் அண்ணாமலையாரை நினைத்தப்படி நடக்க வேண்டும். அல்லது தெய்வீகமான பாடல்களைப் பாடலாம்.

கிரியை சித்த புருஷர்கள் எப்போதும் மலையையட்டி கிரிவலம் செய்கிறார்கள். அவர்கள் நம் கண்களுக்கு தென் படமாட்டார்கள். ஆகவே அவர்களுக்கு இடையூறின்றி மலையை ஒட்டியவாறு கிரிவலம் செய்யாமல் சாலையின் நடுவிலோ அல்லது இடதுப்புறமோ செல்லுதல் வேண்டும். வாகனங்களில் செல்வதையும், சட்டை தொப்பி முதலியன அணிந்து செல்வதையும், குடைபிடித்து செல்வதையும், நடுவில் உணவு, டீ, காபி முதலியவை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். கார்த்திகை தீபம் ஏற்றிய உடன் கிரிவலம் செய்வது அனைத்து விருப்பத்தையும் நிறை வேற்றும். அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். கிழமைக்கு தக்கபடி கிரிவலத்துக்கான பலன்கள் மாறுபடும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிரி வலம் வருபவர்களுக்கு சூரியனின் அருளால் நல்ல உடல் வலிமை, கண்பார்வை, அரசாங்கத்தில் உயர்ந்த பதவி முதலியவைகளும், இறுதி யில் கைலாச வாசமும் கிடைக்கும்.

திங்கட்கிழமை மலையை சுற்றி வலம் வருபவர்கள் ஸ்ரீஉமா மகேஸ்வரரின் அருளால் இவ்வுலகில் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நல்ல குணவானாக சிறப்பாக வாழ்வார் கள். மன நிம்மதியும் தாயின் ஆரோக்கியமும் மேம்படும்.

செவ்வாய்க்கிழமை அருணாசலமலையை வலம் வந்து வழிபாடு செய்பவர்கள் அனைத்து கடன்களிலிருந்தும் விடுபட முடியும். அதோடு நிறைவான செல்வங்களை பெற்று செழிப்புடன் வாழ்வார்கள். இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றும் தினம் செவ்வாய்க்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

நல்ல கல்வி அறிவு, கூர்மையான புத்தி, ஞாபகசக்தி, பேச்சுத்திறமை முதலிய பலனை விரும்புபவர்கள் புதன் கிழமை கிரிவலம் செய்ய வேண்டும்.
வியாழன் அன்று கிரிவலம் செல்பவர்கள் அனைத்து கல்வியையும் கற்று மற்றவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர் பதவியையும், உயர்வான ஞானத்தையும் அடைவார்கள். அனைவராலும் வணங்கப்படுவார்கள்.

வெள்ளிக்கிழமையில் அருணாசல மலையை வலம் வருவதால் நிறைந்த செல்வமும், திருமணம், உணவு, உடை, மக்கள், பதவி, புகழ், நீண்ட ஆயுள் முதலிய அனைத்து செல்வமும் பெறலாம். சனிக்கிழமையில் மலையை வலம் வருபவர் எதிரிகளின் தொல்லை மற்றும் நவக்கிரகங்களால் ஏற்படும் அனைத்து இன்னல்களிலிருந்தும் விடுபட்டு அனைத்திலும் வெற்றி அடைவார்கள்.

கார்த்திகை மாதம் முழுவதும் (17.11.19 முதல் 16.12.19 முடிய) ஒவ்வொரு நாளும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். முடியாதவர்கள் திரயோதசி, சதுர்தசி, பவுர்ணமி (டிசம்பர் 09, 10, 11) ஆகிய மூன்று நாட்களிலாவது வீட்டிலும், தெய்வ சன்னதியிலும் மாலை நேரத்தில் நெய் அல்லது நல்லெண்ணை விளக்கு ஏற்ற வேண்டும். இந்த தீப வழிபாடு உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும்.

திருகார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் மகாதீபத்தையும், மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துவதையும் காண நேர்ந்தால் அவர்களுக்கு மறு பிறவியில்லை. அதுமட்டுமின்றி இம்மையில் மனதில் உள்ள அழுக்குகளும் எரிக்கப்பட்டு, அஞ்ஞான இருள் நீங்கும் என்பதாக தீப திருவிழா அமைந்துள்ளது.

Tags:    

Similar News