ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

முதல் படை வீட்டில் தீப தரிசனம்

Published On 2019-12-10 05:02 GMT   |   Update On 2019-12-10 05:02 GMT
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பால தீபம், மலையில் மகா தீபம் ஏற்றப்படும். 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை தீப காட்சி நடைபெறும்.
தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புண்ணிய தலத்தில் மேளதாள சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதேசமயம் கண்கொள்ளா காட்சியாக தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். பனிரெண்டு மாதமும் திருவிழா நடைபெற்ற போதிலும் இந்த கோவிலுக்கு என்று உகந்த திருவிழாவாக பங்குனி பெருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் தான் தெய்வானையை முருகப்பெருமான் மணம் முடிக்கும் நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடக்கும். எந்த கோவிலிலும் இல்லாத காணக்கிடைக்காத முருகப்பெருமான் சாந்தமாக அமர்ந்த நிலையில் திருமண கோலத்தில் அருள்பாலிப்பது விஷேசமாகும். பங்குனி திருவிழா, தெப்பத் திருவிழா மற்றும் திருக்கார்த்திகை தீப திருவிழா ஆகிய 3 திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் கோவிலுக்குள் பால தீபம், மலையில் மகா தீபம் ஏற்றப்படும். 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை தீப காட்சி நடைபெறும். மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவார்கள். மலையில் மகாதீபம் ஏற்றப்படுவதையொட்டி தீப தரிசனம் காண்பது சிறப்பாகும்.
Tags:    

Similar News