ஆன்மிகம்
அண்ணாமலையார்

அனைவரையும் ஆட்கொண்ட அண்ணாமலையார்

Published On 2019-12-10 04:52 GMT   |   Update On 2019-12-10 04:52 GMT
அது மலையல்ல, மருந்து. பிறவிப்பிணி தீர்க்கும் பெருமருந்து. அலையாட்டம் போடும் அகத்துக்கு அமைதித்தரும் அருமருந்து. அதுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை.
அது மலையல்ல, மருந்து. பிறவிப்பிணி தீர்க்கும் பெருமருந்து. அலையாட்டம் போடும் அகத்துக்கு அமைதித்தரும் அருமருந்து. அதுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை.

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும், காக்கும் கடவுளாகிய திருமாலும் தங்களில் யார் பெரியவர் என வாதம் எழுந்தது. அப்போது இருவருக்கும் நடுவில் ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. ‘திடீரென ஔிப்பிழம்பு எப்படி வந்தது?’ என்று யோசிக்காத பிரம்மனும், விஷ்ணுவும், அந்த ஒளியின் அடியையும், முடியையும் முதலில் கண்டு வருபவர்களே பெரியவர் என்று தீர்மானித்தனர்.

விஷ்ணு, வராக அவதாரமெடுத்து பூமியை துளைத்துக்கொண்டு ஒளிப்பிழம்பின் திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மனோ, அன்னப்பறவை உருக்கொண்டு, திருமுடியைக் காண புறப்பட்டார். விஷ்ணு பகவான், பூமியைக் குடைந்து சென்றும் ஒளிப்பிழம்பின் அடியை கண்டறிய இயலவில்லை. அப்பொழுதுதான் ஒளிப்பிழம்பாகத் தோற்றமளித்தவர், சிவபெருமான் என்பதை அவர் உணர்ந்தார். ‘தன்னையும் பிரம்மனையும் விட ஈசனே பெரியவர், அவர் சிவனே என்று இருப்பதால் அவரை சாதாரணமாக நினைத்து விட்டோம்’ என்று எண்ணியவர், உடனடியாக தன்னுடைய முயற்சியை கைவிட்டு விட்டு, பூமியில் மேல் பகுதிக்கு வந்து சிவனை சரணடைந்தார்.

அதே நேரம் அன்னப் பறவை உருவம் கொண்டு, வானில் பறந்து கொண்டிருந்த பிரம்மன், எதிரே தாழம்பூ ஒன்று வருவதைக் கண்டார். அதனிடம் விசாரித்தபோது, ஒளிப்பிழம்பானது சிவன் என்பதும், அவரது சடையில் இருந்த அந்த தாழம்பூ நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதனால் பிரம்மன், ஒளிப்பிழம்பின் முடியைக் காணும் முயற்சியைக் கைவிட்டார். ஆனால் தாழம்பூவிடம், “உன்னை புறக்கணித்த சிவனை இனியும் நீ மதிக்க வேண்டுமா? நான் ஈசனின் திருமுடியை கண்டதாக திருமாலிடம் கூறுவேன். அதற்கு நீ சாட்சியாக இருந்தால் போதும்” என்று சொல்ல, தாழம்பூவும் ஒப்புக்கொண்டது.

தன்னால் ஒளிப்பிழம்பின் அடியைக் காண முடியவில்லை என்பதை பிரம்மனிடம், விஷ்ணு கூறினார். இதையடுத்து திருமாலை, “நீ ஒரு குழந்தைக்கு ஒப்பானவன்” என்று எள்ளி நகையாடிய பிரம்மன், தான் ஒளிப்பிழம்பின் முடியை கண்டு விட்டதாகவும், அதற்கு தாழம்பூ சாட்சியாக இருப்பதாகவும் கூறினார்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட சிவபெருமான், “உனக்கு புவியில் தனி ஆலயம் அமையாது. உனக்காக பொய்சாட்சி கூறிய தாழம்பூ இனி எனது வழிபாட்டில் பயன்படுத்தப்படமாட்டாது” என்று சபித்தார். பிரம்மனும், தாழம்பூவும் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், அவர்களுக்கு சில சலுகைகளை சிவபெருமான் அளித்தார். பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதற்காகவும், திருமாலை சிறியவர்கள் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது என்பதாலும், மூவரும் ஒருங்கிணைந்து சிவலிங்கமாக காட்சியளிக்க முடிவு செய்தனர். அதன்படி பிரம்மன் அடிப்பாகமாகவும், திருமால் நடுப்பாகமாகவும், சிவபெருமான் மேல் பாகமான பாணமாகவும் இருக்கிறார்கள்.

ஒளிப்பிழம்பாக.. அக்னிப் பிழம்பாக இருந்த சிவபெருமான், குளிர்ந்து மலையாக மாறினார். அதுவே தற்போதைய அண்ணாமலை. இம்மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக கூறுகிறார்கள்.

மலையே இங்கு இறைவடிவமாக இருந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை. இந்த மலையை வலம் வந்து வழிபடும் வழக்கம் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மூலிகை வனம் சூழ்ந்த மலைப் பாதையை, சிவ சிந்தனை தவிர வேறு எந்த சிந்தனையும் இன்றி சுற்றி வந்தால், நம்மை பிடித்த துன்பங்கள், தொல்வினைகள் அகலும் என்கிறார்கள்.

கிரிவலம் செல்லும் நிகழ்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது புராணகாலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன் வாயுதேவன், குபேரன் போன்றோர் இந்த மலையை வலம் வந்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. இவர்கள் ஸ்தாபித்த லிங்கங்களே அஷ்டதிக்கு பாலகர்கள் எனப்படும் எட்டு திசைகளுக்கான லிங்கங்கள் என்றும் சொல்கிறார்கள்.

அண்ணாமலையின் அடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஆலயம். மலையாய் இருந்து அருள்பாலிக்கும் அண்ணல், ஆலயத்தினுள் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் அக்னிதலம், ஆறு ஆதாரத் தலங்களில் மணிப்பூரகத்தலம், நினைத்தாலே முக்தித்தரும் தலம், பிரம்மா- மகாவிஷ்ணு - துர்க்கை தவம் புரிந்த தலம், மகிஷாசுரனை துர்க்கை அழித்தத் தலம், சிவன் உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த தலம், திருப்புகழின் முதல் பாடல் பெற்ற தலம், திருவெம்பாவை பாடப்பெற்ற தலம், சமயக்குரவர்கள் நால்வராலும் போற்றப்பட்ட தலம், யுகம் யுகமாய் அழியாது நிற்கும் மலைத்தலம், 360 புனித தீர்த்தங்களைக் கொண்ட தலம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய ராஜகோபரத்தை கொண்ட தலம் என இதன் பெருமைகளை சொல்லிக்கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இதில் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்றுநாள் தெப்பதிருவிழாவும், அதனையடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறும். சிவன் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில், திருமால் மற்றும் பிரம்மன் ஆகியோருக்கு அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுவதாக ஐதீகம்.

கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில், 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதைக் காண பல லட்சம் பக்தர்கள், அங்கு கூடுவார்கள். இந்தியாவில் நடைபெறும் ஆன்மிக விழாக்களில் கார்த்திகை தீபவிழா மிகவும் முக்கியமானதாகும்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்
Tags:    

Similar News