ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 25-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

Published On 2019-12-06 05:17 GMT   |   Update On 2019-12-06 05:17 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இங்கு 18 அடி உயரமுள்ள விஷ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது. அன்றையதினம் சூரிய கிரகணம் என்பதால் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை மூடப்படும். இதனால், கோவில் நிர்வாகம் முந்தைய தினமான 25-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்திவிழாவை கொண்டாடுவதென முடிவு செய்துள்ளது.

இதையடுத்து வருகிற 24-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கும், 10.30 மணிக்கு தாணுமாலயசுவாமிக்கும் அபிஷேகம், மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச்சாறு, தேன் உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தைக் காண அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவர்.

மதியம் 12 மணிக்கு விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. முன்னதாக பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, முறுக்கு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவை வழங்கப்படும். மேலும் காலை 10 மணி முதல் அன்னதானம் வழங்கப்படும். இரவு 7 மணிக்கு விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர்குழு தலைவர் சிவ.குற்றாலம் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News