ஆன்மிகம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி

Published On 2019-12-06 04:45 GMT   |   Update On 2019-12-06 04:45 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியாக வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தின்போது மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மலை ஏற வரும் பக்தர்களுக்கு அன்று காலை 6 மணி முதல் திருவண்ணாமலை செங்கம்-சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் காலை 6 மணி முதல் மலை ஏற அனுமதிக்கப்படுவர்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை எண்ணுடன் அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்திற்குள் மலையில் ஏறி இறங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News