ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவில்

பிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-11-22 05:58 GMT   |   Update On 2019-11-22 05:58 GMT
24 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை பராமரிப்பின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 24 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி தொல்லியல் துறை சார்பில் பெரியகோவிலில் உள்ள கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்வெளி சீரமைப்பு, கல்தளம் பதிக்கும் பணி, கோவில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைதளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைக்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

திருச்சுற்று மண்டபங்களில் உள்ள லிங்கங்களை பக்தர்கள் யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டன. திருச்சுற்று மாளிகையில் இருந்த கதவுகளும் சீரமைக்கப்பட்டன. கோவிலில் உள்ள மராட்டா நுழைவு வாயில், கேரளானந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அதைத்தொடர்ந்து பெரியகோவில் விமானகோபுரம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்டமாக முருகன் சன்னதியில் உள்ள கோபுரம், விநாயகர் கோபுரங்கள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதர பணிகளும் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதற்காக யாகசாலை நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் கோவிலுக்குள் வந்து செல்வதற்காக அமைக்கும் பாதை, முக்கிய பிரமுகர்கள் வரும் வழி ஆகியவை குறித்து கலெக்டர் கோவிந்தராவ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவிலை சுற்றி வலம் வந்து செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை 3 மணி நேரம் இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டார்.

முன்னதாக காலை 9 மணிக்கு ஆய்வு தொடங்கிய கலெக்டர் கோவிந்தராவ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பூங்கா பணிகள் மற்றும் சத்திரம் நிர்வாகத்துக்குட்பட்ட தங்கும் விடுதிகள், பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, ஆர்.டி.ஓ. வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிரு‌‌ஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம், தொல்லியல் துறை அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News