ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்

Published On 2019-11-22 04:57 GMT   |   Update On 2019-11-22 04:57 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்தின்போது பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவானது 10 நாட்கள் தொடர்ந்து வெகு விமர்சியாக கொண்டாடப்படும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 10-ந் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் கோவில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை சுமார் 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபம் ஏற்றுவதற்கு 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மகா தீபத்தின்போது பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மண்ணு நாட்டார் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 30 வருடங்களாக இந்த பணியை செய்து வருவதாகவும், தீப கொப்பரையை சீரமைத்து கோவிலில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த கொப்பரையானது 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய செம்பு தகட்டினால் செய்யப்பட்டு உள்ளது. இதன் மேல்பாகம் 3.75 அடியும் மற்றும் கீழ்பாகம் 2.75 அடியும் சுற்றளவு கொண்டதாகும். இது சுமார் 150 கிலோ எடை கொண்டதாகும்.
Tags:    

Similar News