ஆன்மிகம்
முடவன் முழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா

Published On 2019-11-18 07:01 GMT   |   Update On 2019-11-18 07:01 GMT
மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலாகட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடுபட்டதாக ஐதீகம்.

முன்பு ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரை சேர்ந்த நடக்க முடியாத ஒரு பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை. அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்து விட்டது.

இதனால் மனம் உடைந்த பக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அவருடைய கண் முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரியில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி காவிரி துலாகட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனை பெறுவார்கள் என்று அருளாசி வழங்கினார்.

அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வழக்கம்போல் நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதையொட்டி மயூரநாதர்கோவிலில் இருந்து மயூரநாதர், அபயாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலாவாக காவிரி துலா கட்டத்தை அடைந்தார்.

அங்கு அஸ்திரதேவருக்கு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை போலீசார் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News