அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பவுர்ணமியையொட்டி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நேற்று மாலை நடந்தது. மூலவர் கருவறையிலும், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் சாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
அன்னாபிஷேகம் விழாவில் சாமிக்கு அன்னம் சாத்தும் சாயரட்சை காலத்தில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது மரபு கிடையாது.
எனவே அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. அதன்பிறகு அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும், திருநேர் அண்ணாமலை கோவிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை 6.46 மணிக்கு தொடங்கி இன்று இரவு 7.49 மணிக்கு நிறைவடைகிறது.
அதையொட்டி நேற்று மாலை தொடங்கி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கிரிவலப்பதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தபடி கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி கிரிவலம், அன்னாபி ஷேகத்தையொட்டி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம், கட்டண தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.