ஆன்மிகம்
திருவதிகை வீட்டானேசுவர்

ஆணவத்தையும் அசுரர்களையும் ஒரே நேரத்தில் அழித்த சிவபெருமான்

Published On 2019-11-11 08:58 GMT   |   Update On 2019-11-11 08:58 GMT
ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள ஆலயம் காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது.
அரியானை யடிதூக்கி யாடினானை அப்பருக்குச் சூலைநோய் கற்றிட்டானை
தெரியாமல் முன்தொடர்ந்து தொழுதொணாச் சுந்தரர்க்கு திருவடியை சூட்டினானை
கரியானை அம்பாக்கி கனகமேருக்கு கல்லினையே வில்லாக்கிக் கடுகியோடித்
திரிவார்தம் திரிபுரத்தை சிரித்தெரித்த திருவதிகை பெருமானை சிந்தை செய்வோம்.

சிவபெருமான், உலகத்தை காப்பதற்காக பல தடவை திருவிளையாடல்களை நடத்தியுள்ளார். பல தடவை தீய சக்திகளுடன் போர் புரிந்துள்ளார். அவர் அருள் புரிந்த இந்த இடங்கள் எல்லாம் சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழக மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

அதாவது ஒரு தலத்தில் சிவபெருமான் என்ன செயல் புரிந்தாரோ.... அதற்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அந்த வகையில் சிவபெருமான் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வீரச்செயல்கள் புரிந்த இடமான 8 தலங்கள் குறிப்பிடப்படுகின்றது. இந்த தலங்களுக்கு அட்ட வீரட்ட தலங்கள் என்று பெயர். எண் பெரும் வீரட்ட தலங்கள் என்றும் சொல்வார்கள்.

திருநாவுக்கரசர் தனது பாடல் ஒன்றில் இந்த 8 வீரட்ட தலங்களை முறையே திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை, திருக்குறுக்கை, திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர் மற்றும் திருவிற்குடி என்று வகைப்படுத்தியுள்ளார். இந்த 8 தலங்கள் ஒவ்வொன்றிலும் சிவபெருமான் ஒவ்வொரு வகையில் தனது வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

8 இந்த தலங்கள் பற்றி யார் ஒருவர் சிறப்புற தம் நாவால் சொல்கிறார்களோ... அவர்களை நெருங்க எமன் கூட பயப்படுவான் என்பது வரலாறாகும். இந்த 8 வீரட்ட தலங்களுக்கும் உள்ள மற்றோரு சிறப்பு என்னவெனில், இந்த 8 தலங்களும் தேவார காலத்துக்கும் முன்பே இருந்த பழம்பெருமை கொண்டவை. இந்த 8 தலங்களும் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

இந்த வீரட்ட தலங்களில் திருவதிகை தலம் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். வீரட்ட தலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திருவதிகை ஆலய புராண வரலாறு வித்தியாசமானது...

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அசுரர்களை அழிக்க எல்லா தேவர்களின் உதவியையும் சிவபெருமான் நாடி பெற்றார். இதனால் அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.

உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்களின் ஆவணத்தையும் அசுரர்களின் அட்டகாசத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் திருவதிகையில் முப்புரத்தை எரித்ததைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் நடந்தன. அந்த நிகழ்வுகள் தமிழ் நாட்டில் தோன்றி சிவாலயங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள ஆலயம் காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த ஆலயம் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

அந்த தகவல்கள் ஒவ்வொன்றும் ஈசனின் சிறப்பையும், தலப்பெருமையும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைத்து விட்டு வருகிறார்களோ... அவர்கள் வாழ்வில் ஈசன் நிகரற்ற ஒளியேற்றி ஒங்கச் செய்வார் என்பது நிச்சயமானது. 
Tags:    

Similar News