ஆன்மிகம்
குட்டக்கல் மலையில் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-11-11 05:33 GMT   |   Update On 2019-11-11 05:33 GMT
அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி குட்டக்கல் மலையில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி குட்டக்கல் மலையில் அமைந்துள்ளது தர்மசாஸ்தா கோவில். இந்தகோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மங்கள இசையும், மஹாகணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. அன்று இரவு மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலமும், முளைப்பாரி மற்றும் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மறுநாள் வழக்கம்போல் யாகசாலை பூஜைகளும் நடந்தது. மூன்றாம் நாள் காலையில் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த காசி, ராமேசுவரம், அழகர்மலை, கங்கை, யமுனை உள்ளிட்ட பல்வேறு தீர்த்த குடங்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அய்யப்பன் கோவில், விநாயகர் கோவில் மற்றும் முருகன் கோவில் கோபுர கலசங்களில் புனிததீர்த்தம் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதைபார்த்து கோவிலை சுற்றி நின்ற பக்தர்கள் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் முழங்க வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு புனிததீர்த்தமும், பூஜைமலர்களும் வழங்கப்பட்டது. பின்னர் அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை முடுவார்பட்டி அய்யப்ப, முருக பக்தர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

இதேபோல் சோழவந்தான் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் கருப்பணசாமி பிரதிஷ்டை, அபிஷேகம் நடந்தது. கண்ணன் என்ற பரசு ராமர் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகபூஜைகளை நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. பின்பு யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது.

தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட கருப்பணசாமி, பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சர்வ அலங்காரத்தில் பத்ரகாளி அம்மன் வீதி உலா வந்தார். இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News