ஆன்மிகம்
சீரடி சாய்பாபா

சாயிபகவான் தத்துவச் சுடர்கள்

Published On 2019-11-08 08:59 GMT   |   Update On 2019-11-08 08:59 GMT
ஆத்மாவை தூய்மையாய் வைத்திருப்பவன் என்றும் நிம்மதியாய் வாழ்கிறான். சாயிபகவானின் தத்துவச் சுடர்களை அறிந்து கொள்ளலாம்.
என்னுடைய லீலைகளையும் கதைகளையும் தொகுத்து சொல்லப்போனால் நான் உள் கருவியாய் இருந்து உதவுவேன். நீ வெளிக் கருவியாய் இயங்க வேண்டும்.
சுருங்கச் சொன்னால் என் வரலாற்றை நானே எழுதியது போல் உண்மையும் உயர்வும் தெய்வீகமும் உடையதாய் அமைய வேண்டும். எழுதுபவருக்கு தான் என்ற அகந்தை இருக்கக்கூடாது.

அகந்தை இன்றி எவன் என்னை நெருங்குகிறானோ அவனுக்கு நான் என்றும் நெருக்கமானவனாகவே இருப்பேன். என்னுடைய சரிதத்தையும் உபதேசங்களையும் படித்தால் பக்தர்கள் தம் மனங்களில் நம்பிக்கை வேரூன்ற பெற்று பேரின்ப நிலையை பெறுவார்கள்.

என் பக்தர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் எங்கு இருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் துன்பப்பட கூடாது என்பதே.

வருவனவற்றை எல்லாம் எதிர்கொள்பவன் தான் துறவி. வந்த ஒரு நிகழ்ச்சிக்கு நொந்து வெந்து விரக்தியானவன் எப்படி துறவியாக முடியும்?

துறவு என்பது ஒரு கடமை. அதுபோல இல்லறம் என்பதும் ஒரு கடமை தான். அதில் ஒவ்வொருவரும் தம் கடமை சரிவர செய்ய வேண்டும்.

குழந்தை பிறப்பதும் உறவினர் இறப்பதும் முன் கர்மாவின் பலன். அதை உலகத்தை உருவாக்கிய பிரம்மாவினாலும் மாற்ற இயலாது.

சூரியனையும் சந்திரனையும் பார்த்து எப்போதும் தோன்றும் இடத்திலிருந்து இன்று இரண்டு அடி தள்ளி உதிக்க வேண்டும் என்று யாராவது கட்டளை இட முடியுமா?

பிறந்த ஒவ்வொருவரும் கர்மப்படி தமக்கு உரிய காலத்தில் மரணம் உண்டு என்பதை உணர வேண்டும்.

பெற வேண்டியதை உரிய காலத்தில் பெறுவது எப்படி தவிர்க்க முடியாதோ, அது போலவே இழக்க வேண்டியதையும் உரிய காலத்தில் இழந்து தான் ஆக வேண்டும்.

சம்சாரத்தை துறப்பதில் நிம்மதி உள்ளது என்று கூறுவதில் உண்மை இருக்கிறது என்றாலும், அதுவே முழுமையான உண்மையாகாது.

ஒவ்வொரு மனிதனும் பிறந்த பின் எப்படி வாழ்ந்தாலும் அவன் மறையும் வரையில் ஏதோ ஒரு வழியில் சம்சார பந்தத்திற்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். இருந்து தான் ஆக வேண்டும். இது தான் உலக நியதி.

நான் கூட ஒரு வகையில் சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டு தான் விழிக்கிறேன். என்னை நம்பியவர்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறேன். என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன். இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.

எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.

எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.

முற்பிறப்பில் நீ செய்த கர்மாவின் பலனையே இப்போது நீ அனுபவிக்கிறாய். அதன் பலனால் தான் நீ மனித உடல் கொண்டு உள்ளாய்.

உலகில் மனிதன் மட்டும் ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதாய் நீ நினைத்தால் அது தவறு. பெரிய தவறு. எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் கர்மாவை பொறுத்து வேறுபாடு உள்ளது. நுட்பமாய் நோக்கினால் உனக்கு அது புரியும்.

நாய்களை பொதுவாக நோக்கினால் அவற்றிடையே உள்ள வேறுபாடு தெரியாது. அதே சமயம் உற்று நோக்கினால் உண்மை தெரியும். பணக்காரன் வீட்டு நாய் பஞ்சனையில் உலாவுகிறது. ஏழை வீட்டு நாய் குப்பை மேட்டில் தான் உழல்கிறது.

மனிதனுக்கு பகையாய் இருப்பவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறுந்தான். இவை அனைத்துமே மாயையின் தோற்றங்கள்.

கடலில் நீந்துபவன் ஒவ்வோர் அலையையும் கடந்து கரை சேர்வது போல, நல்வாழ்க்கையை பெற விரும்புபவன் இந்த ஆறு அலைகளை கடக்க வேண்டும்.

செல்வன் ஒருவன் பொன்னாபரணம் ஒன்றை வாங்கி அணிந்தால் ஏழை ஒருவன் அதை பார்த்து பொறாமை அடைகிறான். தானும் அது போன்ற ஆபரணம் ஒன்றை பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது லோபம், மாயையால் தோன்றும் ஒவ்வொன்றும் இப்படிப்பட்டவை தான்.

செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும். செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன. அதுபோலத்தான் வாழ வேண்டும்.

தாழ்மையாய் இருக்க வேண்டும் என்று நான் சொல்வதால் அனைவரிடமும் பணிவாய் இருக்க வேண்டும் என்று பொருள் அன்று. கொடியவர்களிடம் கடுமையாகத்தான் இருக்க வேண்டும்.

அறவழிகளில் பொருளைச் செலவு செய்ய வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாய் பொருளை தானம் செய்து ஆண்டியாகி விடக் கூடாது. வாழ்க்கைக்கு ஓரளவு செல்வம் அவசியமே. அதன் பொருட்டு கஞ்சனாகவும் இருக்கக்கூடாது.

சிறியதை பெரிது செய்யாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அதற்காக அதிலேயே மூழ்கி கடவுளை மறந்து விடக்கூடாது.

மனம் கட்டுக்கு அடங்காது. அதை அடக்க முயல வேண்டும். மனிதனது நிம்மதி என்பது அதில் தான் இருக்கிறது.

ஈயானது எல்லா பொருட்கள் மீதும் உட்காருகிறது. ஆனால் தீயை அணுகும் போது பறந்து விடுகிறது. அது போலத்தான் மனமானது சிற்றின்பங்களில் மயங்கி பேரின்பமான கடவுளை நெருங்கும் போது வேறு புறம் போய்விடுகிறது.

பிறவிகளில் மானுடப் பிறவியே மிக மிக உயர்ந்தது. அந்த பிறவி தான் தன்னை படைத்தவனை நினைத்து ஆராதித்து ஆனந்தம் அடைகிறது.

வழிபாடுகளுள் உருவ வழிபாடு மிகவும் உயர்ந்தது. அந்த உருவத்தை மனத்தில் எண்ணி வழிபடும் போது மனம் ஒரு நிலையை அடைவது எளிதாகிறது.

கடவுளின் திருவிளையாடல்களை எண்ணினாலும், தியானம் செய்வதாலும், புராணங்களை பாராயணம் செய்வதாலும் கடவுளை நெருங்குவதற்கு மேலும் வழி பிறக்கிறது.

சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுவதும் நன்மையே பயக்கும். வாழ்வில் ஆசைகளை குறைத்துக்கொண்டே வந்தால் நிம்மதி பெருகிக்கொண்டே போகும்.

ஹரி யார் என்று அறியாதவர்கள் பண்டரிபுரத்திற்கு யாத்திரை சென்று பலன் என்ன? இப்படி யாத்திரை போகிறவர்கள் பலர் உண்மையான பக்தியால் போவதில்லை. பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.

ஆத்மாவை தூய்மையாய் வைத்திருப்பவன் என்றும் நிம்மதியாய் வாழ்கிறான்.
Tags:    

Similar News