ஆன்மிகம்
ஆறாட்டு விழாவையொட்டி பால் அபிஷேகம் நடந்ததையும், திரண்டிருந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா

Published On 2019-11-07 04:20 GMT   |   Update On 2019-11-07 04:20 GMT
மயிலாடி புத்தனாறு கால்வாயில் நடந்த கோலாகல விழாவில், மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா நடந்தது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது. தினமும் கோவிலில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

10-வது நாள் திருவிழாவான நேற்று சுப்பிரமணியசாமிக்கு மயிலாடியில் ஆறாட்டு விழா கோலாகலமாக நடந்தது.

இதற்காக மாலை 4 மணிக்கு மருங்கூரில் இருந்து சுப்பிரமணியசாமி வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். வழிநெடுக பக்தர்கள் திரண்டு நின்று சாமியை வழிபட்டனர்.

மாலை 6 மணிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயை சுப்பிரமணியசாமி அடைந்தார். அங்குள்ள படித்துறையில் சாமிக்கு பால், இளநீர், பன்னீர், தேன், களபம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

அதன்பிறகு சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியை தந்திரிகள் நிறைவேற்றினார்கள். அதைத்தொடர்ந்து சாமிக்கு அலங்காரம்செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆறாட்டு மடத்தில் சுப்பிரமணிசாமி எழுந்தருளினார். ஆறாட்டு நிகழ்ச்சியை காண கால்வாய் கரையை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுஇருந்தனர். அவர்கள் ஆறாட்டு மற்றும் தீபாராதனையை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மீண்டும் வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி எழுந்தருளினார். அங்கிருந்து மயிலாடியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மருங்கூர் புறப்பட்டார்.

ஆறாட்டு நிகழ்ச்சியையொட்டி மயிலாடியில் கலை இலக்கிய பேரவை சார்பில் இலக்கிய விழா நடந்தது. நேற்று இரவு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இன்று (வியாழக்கிழமை) மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஆறாட்டு நிகழ்ச்சியில் மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அகஸ்தியலிங்கம், கலை இலக்கிய பேரவை நிர்வாகிகள் சுப்பிரமணியம், நாகராஜன், சுடலையாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆறாட்டு விழாவையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News