ஆன்மிகம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

சிவன் கோவில்களில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்

Published On 2019-10-24 02:58 GMT   |   Update On 2019-10-24 02:58 GMT
தென்காசி, வீரவநல்லூரில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி - அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு உலகம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேளதாளங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க நிலையத்தில் இருந்து தேர் புறப்பட்டது. தேருக்கு முன்பு சிவாச்சாரியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்களை எழுப்பினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10.15 மணிக்கு நிலையத்தை அடைந்தது.

விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, சுப்புராஜ், திருவிளக்கு பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னையா பாண்டியன், பா.ஜ.க. நகர தலைவர் திருநாவுக்கரசு, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. நாளை மாலை 5 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் உலகம்மனுக்கு, காசிவிசுவநாத சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் காசி விசுவநாத சுவாமி- உலகம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதேபோல் சேரன்மாதேவியை அடுத்து வீரவநல்லூரில் அமைந்துள்ள பூமிநாதர் உடனுறை மரகதாம்பிகை கோவில் ஐப்பசி தேரோட்டமும் நேற்று நடைபெற்றது. முன்னதாக சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் எழுந்தருளி, தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News