ஆன்மிகம்
தேவிரம்மா, கோவில்

மேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்

Published On 2019-10-23 07:55 GMT   |   Update On 2019-10-23 07:55 GMT
‘மேளம் அடித்தால் நடை திறக்கும்’ தேவிரம்மா கோவிலில் தீப உற்சவம் தீபாவளி அன்று நடக்கிறது.
சிக்கமகளூருவில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் பிண்டுகா பகுதியில் தேவிரம்மா மலை அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சி ‘டைமண்ட்’ வடிவில் இருக்கும். இந்த மலையில் பிரசித்தி பெற்ற தேவிரம்மா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி தேவிரம்மா கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்.

இந்த கோவிலில் மேளம் அடித்தால் நடை திறப்பது சிறப்பம்சமாகும். தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு நடக்கும் தீப உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி தேவிரம்மா அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று, அதாவது வருகிற 27-ந்தேதி மலை உச்சியில் உள்ள தேவிரம்மா அம்மன் கோவிலில் தீப உற்சவம் நடக்கிறது. இதையொட்டி வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேவிரம்மா கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடக்கிறது. 28-ந்தேதி, கோவிலின் சிறப்பான ‘மேளம் அடித்தால் நடை திறக்கும்’ நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது, மேளம் அடித்தவுடன் கோவிலின் கருவறை தானாக திறக்கும். அதன்பின்னர் தீக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தீக்குழி இறங்குகிறார்கள்.



இதைத்தொடர்ந்து 29-ந்தேதி தேவிரம்மா அம்மன் கோவிலில் பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த தீப உற்சவத்தில் கர்நாடகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

தேவிரம்மா அம்மன் கோவில் தீப உற்சவத்தையொட்டி சிக்கமகளூருவில் இருந்து மல்லேனஹள்ளி, பிண்டுகா ஆகிய பகுதிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவிரம்மா அம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மலை அடிவாரத்தில் இருந்து உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதையை சீரமைக்கும்போது மரங்களை வெட்ட வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவிரம்மா அம்மன் கோவில் தீப உற்சவத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News