ஆன்மிகம்
அம்மன் ரிஷப வாகனங்களில் திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

காவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2019-10-19 06:20 GMT   |   Update On 2019-10-19 06:20 GMT
திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலமாகும். மேலும் காவிரியின் தென்பகுதியில் உள்ள 127 சிவன் கோவில்களில் 3-வது சிவன் கோவிலாகவும், பாடல் பெற்ற 276 சிவன் கோவில்களில் 3-வது கோவிலாகவும் பெருமைபெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டமும், ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். தீர்த்தவாரியின்போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும் என்பதும், கங்கை நதியில் குளித்ததற்கு சமம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில் இந்த ஆண்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியானது ஐப்பசி முதல் நாளான நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மனுடனும், மற்றொரு வெள்ளிரிஷப வாகனத்தில் அம்மனும் எழுந்தருளினார்கள். இதையடுத்து சாமி புறப்பாடாகி முக்கிய வீதிகளில் வலம் வந்து காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்கள். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறிய பல்லக்கில் கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவர் எனப்படும் வேலுக்கு காவிரி கரையோரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அஸ்திரதேவருக்கு காவிரியில் தீர்த்தவாரி என்னும் துலா முழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது காவிரி ஆற்றில் இருந்த ஏராளமான பொதுமக்கள் நமசிவாய வாழ்க, பராய்த்துறை மேவிய சிவனே போற்றி என்று கோஷங்களை எழுப்பியவாறு, காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள். இந்த துலா முழுக்கு ஐப்பசிமுதல்நாள் திருப்பராய்த்துறையிலும், கடை முழுக்கு மயிலாடுதுறையிலும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒத்துழைப்புடன்கோவில் இணை ஆணையர் சுதர்சன், தக்கார் ராமநாதன், செயல் அலுவலர் ஹேமாவதி ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News