ஆன்மிகம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறை பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறை பீடம் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2019-10-18 04:03 GMT   |   Update On 2019-10-18 04:03 GMT
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறை பீடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம் மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால் கோவிலில் இருந்த வெளிப்புற மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

அதாவது, கோவிலில் ராஜகோபுரத்தை தவிர கருவறை, மகா மண்டபம், அர்த்த மண்டபம், சுற்று பிரகார மண்டபம் என அனைத்து பணிகளும் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, கோவிலின் சுற்றுப்பிரகார மண்டபத்துக்கு ரூ.93 லட்சத்திலும், மகா மண்டபம் ரூ.94½ லட்சத்திலும், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை பீடம் ரூ.63 லட்சத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருவறை பீடம், தூண்கள் ஆகியவற்றில் சிற்ப வேலைபாடுகள் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.

இந்தநிலையில், தற்போது கோவிலில் அம்மன் கருவறை கட்டுமானத்தில் பீடம் அமைக்கப்பட்டு, அதன்மீது அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கருவறை பீடத்துக்கான கொடிவரி, பத்மவரி, கால்கட்டு, பட்டியல் வரி, சிங்க வரி என அடுத்த வரிசையில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, அடுத்த ஆண்டு ஆடி மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கருங்கல்லால் ஆன கருவறை அமைக்கப்படுகிறது. அதிலும், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றில் சிற்ப வேலைபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இவை துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணி என்பதால் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனினும் 3 மாதத்திற்குள் கருவறை கட்டுமான பணிகள் முடிவடையும். வருகிற ஆடிப்பண்டிகைக்குள் திருப்பணிகள் முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என்றனர்.
Tags:    

Similar News