ஆன்மிகம்
முத்தாரம்மன் கோவில்

ஆனந்த கோலத்தில் அருளாட்சி புரியும் முத்தாரம்மன்

Published On 2019-10-13 06:14 GMT   |   Update On 2019-10-13 06:14 GMT
சாந்தமான கோலத்தில் இருக்கும் அம்மன்களிடம் நாம் எது கேட்டாலும், அம்மன் மனம் உவந்து தருவாள். குலசை முத்தாரம்மனும் அத்தகைய பலன்களைத்தரும் அமைதியான, சாந்தமான தோற்றத்தில் இருக்கிறாள்.

சாந்தமான, அமைதியான நிலையில் இருக்கும் அம்மன்களை நிறைய தலத்தில் காணலாம். சாந்தமான கோலத்தில் இருக்கும் அம்மன்களிடம் நாம் எது கேட்டாலும், அம்மன் மனம் உவந்து தருவாள். குலசை முத்தாரம்மனும் அத்தகைய பலன்களைத்தரும் அமைதியான, சாந்தமான தோற்றத்தில் இருக்கிறாள்.

குலசை முத்தாரம்மனை நாடி செல்லும் ஒவ்வொரு பக்தரும் இந்த தோற்ற சிறப்பை தெரிந்து கொண்டால், அதை உணர்ந்து புரிந்து வழிபட்டு கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

பொது மக்களை துன்புறுத்தி வந்த மகிசன் எனும் அசுரனை வதம் செய்யவே அம்பாள், குலசை முத்தாரம்மனாக அவதாரம் எடுத்தாள். அவதார இலக்கான வதம் முடிந்ததும், அன்னைக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டது. அதாவது வதம் காரணமாக முத்தாரம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய சிவபெருமானை நோக்கி அம்பாள் தவம் இருந்தாள். தன் உண்மை உருவத்தை மாற்றி யாசகம் எடுத்தாள். தன்னையே அவள் வருத்திக் கொண்டாள். இதனால் அவள் மீது ஈசன் இரக்கம் கொண்டார்.

அம்பாளுக்கு காட்சித்தந்து அருள்பாலிக்க சிவபெருமான் தயாரானார். அப்போது அன்னை ஒரு கோரிக்கை விடுத்தாள். எல்லாருக்கும் காட்சி தருவது போல லிங்க வடிவத்தில் எனக்கு காட்சித்தரக் கூடாது. மனித உருவில் வந்து காட்சி தர வேண்டும் என்று முத்தாரம்மன் கேட்டுக் கொண்டாள். அதை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். மனித வடிவில் காட்சி அளித்து முத்தாரம்மனுக்கு அருள்பாலித்தார். தனது விருப்பம் நூறு சதவீதம் நிறைவேறியதால் அம்பாள் ஆனந்தமானாள். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அத்தகைய ஆனந்தமயமான கோலத்தில் தான் இப்போதும் முத்தாரம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்கள் கேட்பதை எல்லாம் வாரி, வாரி வழங்கி அருளாட்சி செய்து வருகிறாள். அது மட்டுமின்றி தனக்கு காட்சி அளித்தது போன்று பக்தர்களுக்கும் மனித உருவில் காட்சி அளிக்க வேண்டும் என்று அம்பாள் கேட்டுக் கொண்டாள். அதை சிவபெருமானும் ஏற்றுக் கொண்டார். இதனால் இந்த தலத்தில் ஈசனும், அம்பிகையும் மனித உருவில் இருக்கிறார்கள். சிவபெருமானை கம்பீரமான மீசையுடன் இங்கு காணலாம். அதுவும் ஈசனும், அம்பாளும் அருகருகே அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய அபூர்வ கோலத்தை பக்தர்கள் பார்க்க முடியாது.

இந்த கோலத்தில் அருள்வதால் குலசையில் சிவபெருமானின் ஆற்றலை பெற்று சிவமயமாக முத்தாரம்மன் திகழ்கிறாள். அதுபோல அம்பாளின் ஆற்றலை சிவபெருமான் பெற்று சக்தி மயமாக உள்ளார். ஆற்றலை இருவரும் பகிர்ந்து கொண்டதால் இது பரிவர்த்தன யோக நிலை என்று கூறப்படுகிறது.
இந்த யோக நிலையால் இத்தலத்தில் அன்னை முத்தாரம்மனின் அருளாட்சி நடக்கிறது. சுயம்புவாக தோன்றிய அவள், தன்னைத்தேடி வரும் ஒவ்வொரு பக்தனையும் மனம் குளிர செய்து அனுப்புகிறாள். குலசையில் கால் வைத்த எந்த ஒரு பக்தனும் ஏமாந்து திரும்பி சென்றதில்லை. அதுதான் குலசை தலத்தின் தனி சிறப்பாகும்.

Tags:    

Similar News