ஆன்மிகம்
பெருமாள்

புருஷோத்தமன் அருள் கிடைக்கும் புரட்டாசி சனிக்கிழமை

Published On 2019-10-12 08:07 GMT   |   Update On 2019-10-12 08:07 GMT
எல்லா சனிக்கிழமைகளைக் காட்டிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எல்லா சனிக்கிழமைகளைக் காட்டிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டு வந்தால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘அவதார புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்று அழைக்கிறார்கள்.

வழிபாடுகள் தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது. நாளும் நல்ல பலன்கள் நடைபெறவும், விதியின் வலிமையை மாற்றவும், துன்பங்கள் விலகி ஓடவும், மன அமைதி பெறவும், ஒவ்வொருவரும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம். முழுமுதற்கடவுள் கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை எண்ணற்ற தெய்வங்களை வணங்கி வருகிறோம். அவற்றில் கிழமைக்கேற்ற வழிபாடு, வாரத்திற்கேற்ற வழிபாடு, திதிக்கேற்ற வழிபாடு, மாதத்திற்கேற்ற வழிபாடு, வருடத்திற்கு ஒருமுறை வழிபடும் வழிபாடு என்று எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. இவை நீங்கலாக முன்னோர் வழிபாடு என்பது நம் முன்னேற்றத்திற்கு முதற்படியாக அமைகிறது. இத்தனை வழிபாடுகளுடன் குலதெய்வ வழிபாட்டையும் நாம் அன்றாடம் மேற்கொண்டால் வாழ்வில் வளமும் நலமும் காண இயலும்.

உலகத்தைக் காக்க விஷ்ணு பலவிதமான அவதாரங்கள் எடுத்தார். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் எனப் படிப்படியாய் எடுத்த அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் முக்கியமானது. காரணம் ராமன் ஒழுக்கம் தவறாமல், உத்தமனாக வாழ்ந்ததுதான். அந்த ராமாயணத்தை செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ள நகரத்தார், தங்கள் வீடுகளில் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதன் முன்னிலையில் வீடுகளிலும், கோவில்களிலும் ராமாயணம் படிக்கிறார்கள். ராம காதையைச் செவி குளிரக் கேட்பார்கள். அப்படிக் கேட்பவர்கள் வாழ்வில், வரும் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை. ராம காதையைப் படிப்பவர்கள், கேட்டவர்களுக்கெல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கிறது. வாழ்க்கைத் தேவையும் பூர்த்தியாகின்றது. இந்த ராமாயணத்தில் சீதா கல்யாணம் நடக்கின்ற போது, அதில் கலந்து கொண்டால் மாலை தேடுபவர்களுக்கு மாலை கிடைக்கும். பட்டாபிஷேகத்தன்று கலந்து கொண்டால் பதவி வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். பூ மகளின் அருகிலிருக்கும் விஷ்ணுவை நோக்கி, புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நன்மைகள் நடைபெறும்.

திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாள், அலர்மேலுமங்கைத் தாயார், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீரங்கம் அரங்கநாதர், மதுரை தல்லாகுளம் பெருமாள், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி, வன்புகழ் நாராயணசுவாமி கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயணப் பெருமாள், அரியக்குடி திருவேங்கடமுடையான், கீழச்சிவல்பட்டி சுந்தரராஜப் பெருமாள், கூடலழகிய சுந்தரராஜப்பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில் என எண்ணற்ற விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. அவரவர்களுக்கு அருகில் இருக்கும் விஷ்ணு கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் வாழ்க்கை வளமாகும். வருமானம் உயரும். புரட்டாசி சனிக்கிழமை அன்று அன்னதானம், வஸ்திரதானம், சொர்ண தானங்களை மேற்கொண்டால் மேலும் நற்பலன்களைப் பெறலாம்.

விஷ்ணு அலங்காரப் பிரியர் என்பதால், புரட்டாசி சனிக்கிழமையில் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, அவரை அலங்கரித்துப் பார்க்க வேண்டும். செந்தாமரை மலர்சூட்டி, பச்சைப்பட்டு அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபடுவது உகந்தது. அதே நேரம் விஷ்ணு தூதன் என்று வர்ணிக்கப்படும் அனுமனுக்கு விளக்கு ஏற்றி வடைமாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும். தக்க விதத்தில் வாழ்க்கையும் அமையும்.

‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே! அந்தப் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்’ என்று கவியரசு கண்ணதாசன் அழகான பாடல் எழுதியுள்ளார். அந்த புருஷோத்தமனின் புகழ்பாட வேண்டிய மாதம் புரட்டாசி மாதமாகும். எனவே இம்மாதம் வரும் சனிக்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபட்டு வியக்கும் வண்ணம் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News